பாரிஸில் இயல்பு வாழ்க்கை என்பது உணவகங்களும் ( restaurant) பார்களும்(Bar) திறக்கப்படுவதில்தான் பெரிதும் தங்கியுள்ளது. உணவகங்களில் உண்டு குடித்து அதில் திளைக்கும் நகரின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வைரஸ் அடியோடு முடக்கி விட்டது.
ஒருமாதத்துக்கும் அதிக காலம் முடங்கிப்போயிருப்பதால் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் உணவகங்கள் மற்றும் ஹொட்டேல்கள் சார்பில் பிரதிநிதிகள் பலர் ஒன்றுகூடி இன்று அதிபர் மக்ரோனுடன் காணொளி மூலமான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
சாகும் தறுவாயில் இருக்கும் தங்கள் துறைகளை காப்பாற்றுமாறு அப்போது அவர்கள் மன்றாடியிருக்கின்றனர்.
பிரபல நட்சத்திர உணவகங்களின் சமையலாளர்கள்(chefs cuisiniers ) பலரும் கூட இந்த சந்திப்பில் பங்கு கொண்டிருந்தனர்.
உணவகங்களின் முக்கியத்துவத்தையும் தற்போதைய கடுமையான சூழ்நிலையையும் தன்னால் உணரமுடிகிறது என்று அவர்களிடம் தெரிவித்த அரசுத் தலைவர், “பிரெஞ்சு மக்களின் வாழ்க்கைக் கலையை வைரஸ் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.
” பல விடயங்களில் உணவகங்கள், பார்கள் முக்கியத்துவம் மிக்கவை என்றாலும் இங்கெல்லாம் நெருக்கமாக அதிக நேரங்களைச் செலவிடுவதால் விஞ்ஞானிகள் அதனை அனுமதிக்கவில்லை.
“இந்த வைரஸ் பிரெஞ்சு வாழ்க்கை முறையை விரும்பவில்லை. ஏனெனில் அது முக்கியமாக மனிதத் தொடர்பு மூலம் பரவுகிறது. எனவே எங்களைத் தண்டிக்கிறது’ ‘-என்றும் மக்ரோன் அப்போது தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார அமைச்சர் புறுனோ லு மேயர், சுகாதார நிலைமைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து உணவகங்களைத் திறக்கும் முடிவு மே மாத இறுதியிலேயே எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இருபதுக்கு குறைவான பணியாளர்களுடன் இயங்குகின்ற உணவகங்களுக்கு 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஈரோக்கள் வரை உதவு தொகை வழங்கும் யோசனை ஒன்றையும் அவர் அறிவித்தார்.
இத் தகவல்களை BFM தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
24-04-2020
(நன்றி குமாரதாஸன்)