வைரஸ் நெருக்கடி காலம் பிரெஞ்சு மக்களிடையே திடீரென சேமிப்பு பழக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
நிலையான வைப்புகளில் சேமிக்கும் பணத்தின் தொகை வழமையை விட மூன்று மடங்கு அதிகரித்திருப்பதை நாட்டின் தலைமை வங்கியான Banque de France இன் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பொதுவாக மாதாந்தம் சராசரியாக ஆறு பில்லியன் ஈரோக்களாக இருக்கும் வைப்புத் தொகை கடந்த மார்ச் மாதம் 19.6 பில்லியனாக உயர்ந்திருப்பதை நிதிநிலை அறிக்கைகள் காட்டுகின்றன.இது அடுத்துவரும் மாதங்களில் மேலும் அதிகரிப்பைக் காட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறிப்பிடக் கூடிய அதிகரிப்பு
Livret A என்கின்ற நிலையான சேமிப்புக் கணக்குகளில் காணப்படுகிறது. நடைமுறைக்கணக்குகளை தவிர்த்து மக்கள் நிலையான சேமிப்பின் அவசியத்தை உணர்ந்திருப்பதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சேமிப்பு அதிகரிப்புக்கு எதிர்காலம் பற்றிய அச்சம், தேவையற்ற நுகர்வுச் செலவுகள் குறைந்தமை போன்ற நிலைமைகளே காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் சாப்பாட்டுக்கான செலவுகள் தவிர ஏனைய கொள்முதல்கள் பெரிதும் அருகி விட்டன.
இந்த நெருக்கடி எப்போது அகலும் என்று தெரியாது ஒருவித பீதி மக்களை தொற்றி உள்ளது. எதிர்காலம் பற்றிய அச்சம் அவர்களை பணத்தை சேமிக்கத் தூண்டுகிறது – என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகிதம் குறைந்த, ஆனால் வரி கூடிய Livret A சேமிப்புக் கணக்குகளில் பொதுவாக மக்கள் பணத்தை வைப்புச் செய்வது குறைவு. ஆனால் தற்போதைய சூழல் அதை மாற்றி விட்டது.
ஆனால் இவ்வாறு மக்களின் நிதி சேமிப்பில் முடங்குவதை அரசு விரும்புவதாக இல்லை.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்த நிதி முடங்காமல் முதலீடுகளில் பயன்படுத்தப்படுவதையே அரசு ஊக்குவிக்கிறது. இதனை பொருளாதார அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். புதிய முதலீடுகளைச் செய்யுங்கள் என்று அவர் மக்களிடம் கோருகின்றார்.
(02-05-2020குமாரதாஸன்)