இன்று ஓகஸ்ட் 9 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுகாதார பாஸ் (passs sanitaire) நடைமுறைக்கு வருகின்றது. பொது இடங்கள், நிகழ்வுகளுக்குச் செல்லவும், பயணங்கள் மேற்கொள்ளவும் இந்த சுகாதார பாஸ் கட்டாயமாகின்றது. அதேவேளை, இதில் சிறிய தளர்வாக ஒரு சில இடங்களுக்குச் செல்ல மாத்திரம் சுகாதார பாஸ் இல்லையென்றால் 72 மணிநேரங்களுக்கு உட்பட்ட எதிர்மறை முடிவுகளுடன் கூடிய PCR அறிக்கைகள் கோரப்படுகின்றன. இந்த ஆவணங்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு காவல்துறையினர் தண்டப்பணம் அறவிடுவார்கள்.
முதல்தடவை இந்த குற்றத்துகாக நான்காம் கட்ட தண்டப்பணமான 750 யூரோக்கள் செலுத்த நேரிடும். அதை குறித்த காலப்பகுதிக்குள் விரைவாக செலுத்தினால் 135 யூரோக்கள் மாத்திரம் செலுத்தினால் போதும். அடுத்த 15 நாட்களுக்குள் இதே தவறை மீண்டும் செய்தால் இப்போது உங்களுக்கு 1.500 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும். அதன் பின்னர் மூன்றாவது தடவையாக அடுத்த 30 நாட்களுக்குள் இதே தவறை செய்தால் இப்போது 3.750 யூரோக்கள் தண்டப்பணமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
போலி ஆவணங்கள் கொண்டுசெல்வது மிகப்பெரிய மோசடி குற்றமாகும். இதற்கு 2 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மருத்துவமனைக்குச் செல்லுதல் போன்ற அவசர கால தேவைகளுக்கு சுகாதார பாஸ் தேவையில்லை. (இது குறுகிய கால தளர்வு மாத்திரமே என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது) அண்மையில் Villepinte (Seine-Saint-Denis) நகரில் போலி சுகாதார பாஸ் சான்றிதழ்கள் வழங்கிய ஒருவருக்கு 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.