
பிரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில் இன்று (13.02.2021) சனிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மூதாளர் அவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை மற்றும் முத்தையன்கட்டு,வலதுகரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர், பிரான்சில் சார்சல் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்கள் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு சாவடைந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் சுதந்திர நாளைக் கரிநாளாகக் கொண்டு பிரான்சில் சிறிலங்காத் தூதரகத்தின் முன்பாக இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளும் இவர், சிங்கள மொழியில், தமிழர்களின் குரலை வெளிக்காட்டத் தவறமாட்டார்.
இதுமட்டுமல்லாமல், பிரான்சில் நடைபெறும் அனைத்து எழுச்சி நிகழ்வுகளிலும் தனது உடல்நிலையை கருதாமல் இவர் முதலாவதாகக் கலந்துகொள்வார்.
ஜெனிவாவில் இடம்பெறும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்வதற்கு தொடருந்து மற்றும் பேருந்துகளில் செல்வதற்கு முதலாவதாக பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்வார்.
ஒவ்வொரு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போதும் தமிழீழ இலச்சினை பொறிக்கப்பட்ட துணியை கழுத்தில் கட்டியிருப்பதுடன், தமிழீழ தேசியக்கொடியைக் கையில் ஏந்தியிருப்பார்.
தமிழின விடுதலைக்காக தாயகத்திலும் புலம்பெயர் மண்ணிலும் குரல்கொடுத்துவந்த குரல் இன்று ஓய்வடைந்துள்ளது.
அன்னாரின் இழப்பினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
இறுதி நிகழ்வு பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)