தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு மாணவர்களால் நாடகத்துறையில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘தொடரும் புறநானூறு’ எனும் தலைப்பிலான நாடகமொன்றை காயல் (SKYPE) ஊடாக நேரடியாக ஒலிபரப்புச் செய்துள்ளனர்.
இந்த நேரடி ஒலிபரப்பில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து,பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்குபற்றிச் சிறப்பித்ததோடு தமது திறனாய்வுகளையும் பாராட்டுகளையும் நேரடியாகவே பகிர்ந்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் இருக்கும் கோவிட் 19 உள்ளிருப்பைப் பயன்படுத்தி நாடகத்தில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது வீடுகளிலேயே இருந்தபடி காயல் (SKYPE) ஊடாக ஒத்திகை பார்த்ததோடு இறுதி நேரடி நிகழ்வையும் தமது வீடுகளில் இருந்தபடி காயல் ஊடாகவே நிகழ்த்தியுள்ளனர்.
தமிழின அழிப்பு மே 18 நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் புதிய முயற்சி, முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் போர்க்குற்றங்கள் விசாரணைக்கான முக்கியத்துவத்தை இடித்துரைக்கும் வகையிலும் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவன் பரமலிங்கம் தனபாலன் அவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதையும் இடம்பிடித்தது.
நாடகத்தின் நிறைவில் அதில் பங்குபற்றிய மாணவர்கள் தம்மையும் தமது பாத்திரங்களையும் அறிமுகம் செய்திருந்தமை சிறப்பாக அமைந்திருந்தது.
தொடர்ந்து இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் எமது ஊடகப்பிரிவிடம் தெரிவித்துள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)