பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக்கண்காட்சியும், தாயகம் பற்றிய வளரும் இளையவர்களுக் கான சந்திப்பும் கடந்த
17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கொலம்பஸ் என்னும் நகரத்தில் ESPACE COLBERT மண்டபத்தில் நிழற்பட, வரைபட, ஆவண சேகரிப்பு கண்காட்சி நடைபெற்றது.
மண்டபத்தின் ஒரு பகுதியில் தமிழர்களின் வரலாற்றை வரைகலை மூலம் செய்தி சொல்லும் படங்களும், அதனுடைய விளக்கங்களும், மற்றும் வாழ்க்கை முறை, எம் மூதாதையரின் வரலாறு, வரலாற்றுச் சான்றுகள் , அடையாளங்கள் என்பன ஆதாரத்துடன் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கருத்தரங்கும் நடைபெற்றது. திரையில் தமிழீழ மக்களின் நீண்ட வரலாற்றை சுருக்கமாக அனைத்து இளையவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் பிரெஞ்சு மொழியில் காட்சிப்படுத்தியதுடன், இளையோர்கள் விளக்கம் கொடுத்திருந்தனர். கேள்வி பதில் நேரத்தில் பல இளைஞர், யுவதிகள் தமக்கு இதுவரை கிடைக்காத கேள்விக்கான பதிலை கேள்விகளாக முன்வைத்தனர். அனைத்திற்கும் மிகவும் பொறுமையாக பல உதாரணங்களை காட்டி இளையவர்கள் தெளிவு படுத்தினர்.
இலங்கை தீவின் அரசியல்யாப்பு, அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இன்றுவரை தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க படங்களுடன் தெரிவித்தனர். அதன் ஓர் ஆதரபூர்வமான பிரான்சில் லாக்கூர்னோவ் பிரான்சு தமிழ்ச்சங்கம் வெளியிட்டிருந்த டொனமூர் முதல் சிறிசேனாவரை என்னும் புத்தகம் (போராசிரியர் மு. திருநாவுக்கரசு அவர்கள் எழுதியது) பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது மிகுந்த பயனை ஆதரபூர்வமான செய்திகளுடன் தரும் இந்தப் புத்தகம் இளையவர்களுக்கு நல்லபயனைத்தரும் என்றும் தெரியப்படுத்தியிருந்தனர். இளையவர்கள் பலர் தமது கேள்விகளின் ஊடாகத் தமக்குத் தேவையான பதில்களை பெற்றிருந்தனர். இளையவர்களுடன் பெரியவர்களும் வந்திருந்தனர். நிகழ்வில் கொலம்பஸ் மாநகரசபையின் துணை முதல்வரும், அனைத்து வெளிநாட்டு சங்கங்களுக்கும் பொறுப்பாக இருப்பவர்கள் கலந்துகொண்டு பேசும்போது வளர்ந்து வரும் ஒவ்வொரு அடுத்த தலைமுறைகளும் தமது பூர்வீகம், வரலாறு என்பதை அறிந்து கொண்டு வாழவேண்டும் என்றும் அதில் தமிழீழ தேசத்தைச்சேர்ந்த தமிழர்கள் நீங்கள் உங்கள் பூர்வீகம், வரலாறு, என்பதை அறிந்து கொண்டு இங்கு வாழவேண்டிய அவசியம் உண்டு என்றும் அதற்கு இங்கு வாழும் புலம்பெயர்ந்த பெற்றோர்கள், பெரியோர்கள் தமது பிள்ளைகளுக்கு அவசியம் அதனை தெரியப்படுத்த வேண்டிய காலத்தில் இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்தார். அனைத்து கருத்துப்பகிர்வு கேள்வி பதில்களுக்கு பிற்பாடு கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. மாலை வரை இக்கண்காட்சி தொடர்ச்சியாக அங்கு நடைபெற்றது.

அதேவேளை இன்றைய நாளும் பிரான்சு மண்ணில் முக்கியம் வாய்ந்ததொரு நாளாகும். அல்ஜீரிய மக்கள் 1961 ல் பரிசு மண்ணில் நடாத்திய போராட்டத்தை அன்றைய அரசு ஆயும் கொண்டு அடக்கி பல உயிர்களை பலியெடுத்திருந்தது. இன்று அந்த நாளினை பிரான்சில் வாழும் அல்ஜீரிய மக்கள் அனைத்து நகரங்களிலும் நினைவுகூர்ந்து வருகின்றனர்; நாட்டின் தலைவர் சனாதிபதியும் நாட்டுமக்களிடம் இந்த செயலுக்கு அதற்கான மன்னிப்பையும் கேட்டிருந்தார்.
இன்றைய கண்காட்சியில் முக்கியமானதொரு விடயம் அனைவரின் கவனத்தில் ஈர்ந்தது. எதுவும் அறியாத வயதில் தன்பெற்றோருடன் பிரான்சு மண்ணிற்கு புலம்பெயர்ந்த தமிழ்பெண்மணியொருவர் தனது இனத்தின் மீதும், மொழிமீதும் வைத்திருந்த பற்றுதலினால் (தான் ஒரு பிரெஞ்சு இனத்தவரை மணம்முடித்திருந்தாலும் தனது இனவரலாற்றை தனது பிள்ளைகளுக்கும், தான் சார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதாரபூர்வமான பொருட்களை சேகரித்து வைத்திருந்ததையும், அதனை வரும் தலைமுறைக்கு கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருப்பதும், அதற்கான பிரெஞ்சு மொழியிலான விளக்கங்களையும் பிரசுரமாகவும் விளம்பரப்பலகையில் ஒட்டியிருந்தார். தான் பிறந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள், கடிதத் தலைப்புக்கள், ஏனைய பொருட்கள், தான் தமிழிச்சி என்பதை சாட்சியங்களாக தந்திருந்தார். இளையவர்களால் தம் தாயக வரைபடம் கொண்ட பொருட்கள், உடைகள், வெளியீடுகள், என்பவற்றையும் வைத்திருந்தனர் மக்கள் இளையவர்கள் பெற்றுக்கொண்டனர்.

காலத்தின் அவசியம் கருதி பிரான்சு தமிழ் இளையோர்கள் முன்னெடுத்த இந்த கண்காட்சி செயற்பாடானது அடுத்து ஒவ்வொரு நகரங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் அந்தந்த பிரதேசத்தில் வாழும் இளையவர்கள் கலந்து கொண்டு தம்மைப்பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்ளவேண்டும். தாம் பிள்ளைகளை பெற்றுவிட்டோம், வளர்த்துவிட்டோம் தம் பணி முடிந்தது என்று பெற்றோர்கள் எண்ணாமல், தன் இனம், தன் மொழி, தன் சந்ததி எது என்பதை தம் பிள்ளைகளுக்குக் கட்டாயம் அறியத்தரப்படவேண்டும். அதை பெரியவர்கள் நாம் செய்ய தவறுவோமாக இருந்தால் அவர்களின் தேடலால் அவர்கள் தேடிச்செல்லும் இலக்கை எம்மால் தடுக்கமுடியாததொரு நிலையேற்படும் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

“ உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது என்பதை ஒவ்வொரு தமிழர்களும் மனதில் வரித்துக் கொள்வோம்.







