பிரான்சு தேசத்தில் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு.!
.பிரான்சு நாட்டின் முள்கவுஸ் என்னும் பிரதேசத்தில் தமிழீழ தேசவிடுதலைக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திய செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் கடந்த 19.01.2025 சாவடைந்திருந்தார். அவரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 29.01.2025 புதன்கிழமை முல்கவுசு நகரத்தில் நடைபெற்றது.
காலை அவரின் சமயரீதியான சடங்குகள் நடைபெற்று முடிந்த பின்னர் 10.00 மணியளவில் அவரின் திருவுருவப்படம் மற்றும் தமிழீழ தேசிக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், மாவீரர் பணிமனை செயற்பாட்டாளர்கள், பிராங்கோ தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்கள் தாங்கி வர அவர்குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அவரின் புகழ் உடலின் மீது தமிழீழத்தேசியக்கொடி போர்த்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க அவரின் புதல்விகள் தந்தையின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கமும், பொதுமக்களின் மலர் வணக்கமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், மற்றும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள், அன்பு விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள். மற்றும் இவர் தாயகத்தில் போராளியாக பயணித்த காலங்களில் இவருடன் பயணித்த நண்பர்கள், இவரின் செயற்பாடுகளால் பயனடைந்தவர்கள், நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி அவர்களின் துணைவியார், புதல்விகள் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
அவர் பற்றிய நினைவுகளையும் நண்பர்கள் பகிர்ந்தனர். பலநூறு மக்களின் கண்ணீருடன் நண்பகல் 12.00 மணிக்கு கட்டமைப்பினரும், உறவுகளும், நண்பர்களும் புகழுடலைத் தாங்கி அக்கினியில் சங்கமிக்கும் இடத்திற்கு எடுத்துச்சென்றனர்.
பணிக்கால நாளாக இருந்தும் இவரின் இறுதி வணக்க நிகழ்வுக்கு சுவிஸ், மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல நண்பர்கள் உறவுகள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு)



















