பிரான்சில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொரோனாவிற்கு பலி!
கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் சேர்ந்தவரும், பிரான்சு வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியை வசித்தவருமான பசுபதி சிறிசாந்தன் (சாந்தன் – வயது 44) அவர்கள் கடந்த 26-03-2020 வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், பிரான்சில் சுவாசி லு றூவா பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஆவார்.
இவரது 3 ஆண் பிள்ளைகள் வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சோலையின் மாணவர்கள் ஆவர்.
வில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்க நிகழ்வுகளிற்கு முன்னின்று பல உதவிகளை வழங்குபவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய இழப்புக் குறித்து வில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள இரங்கல் தெரிவித்துள்ளது.
கண்ணீர் அஞ்சலிகள்!
விடி காலை வேளையிலே
இடியோடு ஒரு செய்தி.
கொடிய நோய் வந்து
விதி சதி செய்ததோ
நேற்று பேசிய குரல் இன்று அடங்கி கிடக்கிறது.
வாழ்க்கை இதுதானா வலிகள் உணர்த்துகிறது.
சாந்தன் அண்ணா…
கூடிச் சிரித்துக் கதை பல பேசித்
திரிந்த நாமின்று உம் நினைவில்
வாடிக் கிடக்கின்றோம்.
அண்ணா!!
சிரித்த உங்கள் முகத்தைக் காண
தேடி அலைந்த எம்மை ஏனின்று
தவிக்க விட்டுச் சென்றீர்கள்?
அண்ணா !!!
சங்கத்தின் நிகழ்வுகளில் எம்மோடு
சங்கமித்து நிற்பீரே_ இன்று
விதி செய்த சதியால் வானுலகு சென்றீரோ?
நாமிங்கு விழியால் உதிரம் சிந்துகிறோம்..
காற்றெங்கும் உம் குரல் இனி கேட்க முடியாதோ என அஞ்சுகின்றோம்.
புன்னகை பூத்த உம்முகம் ஒரு நொடி காண கெஞ்சுகின்றோம்.
உம் இன்னுயிர் ஆத்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்.
விரும்பிடும் முகம் விருந்தோம்பும் குணம் துவண்டிடும் போது தேற்றிடும் குரல்
உதவிட மட்டும் உதவிடும் விரல்
அண்ணன் என்று உரிமையோடு அழைத்தோம் .
சாந்தன் உம்மை பெருமையோடு நினைப்போம்.
நினைவுகள் எம் நெஞ்சத்தில் என்றும்
நிழலாடும் அண்ணா…
எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.