பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது மாணவர்கள் கன்ரீன்களில் மதிய உணவைப் பெற வசதி செய்யப்படும். ஆனால் பிரதேச ரீதியாக பள்ளிகளுக்குப் பள்ளி இது வேறுபடலாம். வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்துவருமாறும் மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.
இத்தகவலை தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸில் மே 11 இல் ஆரம்பப் பாடசாலைகள் மீளத் தொடங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு பள்ளிகளில் வழமை போலக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்தக் கேள்விக்கு கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகளில் மதிய உணவைப் பெறுவது மாணவர்களின் அடிப்படையான உரிமை.
விஞ்ஞான நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் பாடசாலைகளிலேயே மாணவருக்கான மதிய உணவு கிடைக்கச்செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. இதன்படி மாணவர்கள் உணவுக்காக கன்ரீன்களை அணுக முடியும். ஆனால் பல நகரசபைகளில் கன்ரீன் செயற்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்னர் புதிய சுகாதார ஆயத்தங்களைச் செய்ய வேண்டி உள்ளது. அதன்பிறகே அவை இயங்க உள்ளன.
நிலைமைக்கு ஏற்ப வீடுகளில் தயாரித்த உணவை எடுத்துவந்து சாப்பிடுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.
தேசிய ரீதியான புதிய சுகாதார நெறிமுறைகள் நிலைமையைப் பொறுத்து இடத்துக்கிடம் வேறுபடலாம்.
-இவ்வாறு கல்வி அமைச்சர் விளக்கமளித்தார்.
பிரான்ஸில் உள்ளிருப்பில் இருந்து மக்களை விடுவிக்கும் முதற்கட்டம் மே 11 ஆம் திகதி தொடங்குகிறது. தொற்று காரணமாக நாளாந்தம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு மூவாயிரத்துக்கு குறைவாக இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாளில் இந்த விடுவிப்புத் திட்டம் அமுலுக்கு வரும் என்று நாட்டின் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இந்த விடுவிப்புத் திட்டத்தின் முதற்கட்டத்தில் பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குகளை கல்வி அமைச்சு பட்டியலிட்டுள்ளது.
அவற்றில் சில வருமாறு.:
*மாணவர்கள் கூட்டமாக பாடசாலைக்குள் பிரவேசிப்பது, வெளியேறுவது தடுக்கப்படும். சமூக இடைவெளிக்கு அமைய தனித்தனியே அவர்கள் உள் செல்வதை ஒழுங்குபடுத்த வாயில்களில் ஒருவர் கடமையில் இருப்பது அவசியம்.
*பாடசாலையில் இருக்கும் நேரங்களில் மாணவர்கள் ஓர் ஒழுங்கில் அடிக்கடி கைகளை கழுவிச் சுத்திகரிப்பது அவர்களது
வகுப்பறைச் செயற்பாடுகளில் ஒன்றாக உள்ளடக்கப்படும்.
*வகுப்பறைக்கு வெளியே நடைபாதை போன்ற இடங்களில் மாணவர்களிடையே சமூக இடைவெளி பேணப்படுவதைத் தீவிரமாக கண்காணிக்க வசதி செய்யப்பட வேண்டும்.
*பாலர் வகுப்பு மேசைகளுக்கு இடையே குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி கட்டாயம் பேணப்படவேண்டும். 50 சதுர அடி அளவுடைய வகுப்பறையில் 15 மாணவர்கள் மட்டுமே உள்ளடக்கப்படவேண்டும்.
*பாடசாலைக்கு உள்ளே வேறு செயற்பாடுகளுக்கு இடம்மாறி சென்றுவரும் போது வரிசைகளில் சமூக இடைவெளி பேணப்படவேண்டும்.
*கதிரைகள், மேசைகள், மாணவர் புழங்கும் இடங்கள், கதவுக்கைப்பிடிகள் போன்றன ஒரு நாளில் குறைந்து ஒரு தடவையேனும் சுத்தமாக்கப்படுதல் அவசியம். கழிப்பறைகளை இடையிடையே அடிக்கடி சுத்திகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
*வகுப்பறையில் எவராவது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் உடனடியாக அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துப் பராமரித்து பெற்றோருக்கு அறிவிக்க ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
இவைபோன்ற இன்னும் பல விதிமுறைகள் அடங்கிய கையேடுகள் விரைவில் கல்வி அமைச்சினால் பாடசாலை நிர்வாகங்க ளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(30-04-2020 குமாரதாஸன்)