மே 11 ஆம் திகதிக்குப் பின்னர் பொதுப்போக்குவரத்துகளில் பயணிகள் நெரிசலாகச் செல்வது தடுக்கப்படும்.
இதற்கு வசதியாக அலுவலக நேரங்களை மாற்றி அமைக்குமாறு தொழில் வழங்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.
பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தில் மே 11ஆம் திகதி சேவைகள் தொடங்கும் போது போக்குவரத்துகளில் தனிநபர் இடைவெளி பேணல் உட்பட சுகாதார நடைமுறைகளை எப்படி முன்னெடுப்பது என்று முக்கிய கூட்டம் ஒன்றில் ஆராயப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் Elisabeth Borne, இல் து பிரான்ஸ் தலைவி Valérie Pécresse, பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo,
ஆகியோருடன் SNCF, RATP ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களின் கடமை நேரம் குறிக்கப்பட்ட அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குமாறு வேலை வழங்குநர்களைக் கேட்டுக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரே நேரத்தில் அனைவரும் திரண்டு போக்குவரத்துச் செய்வதால் உருவாகும் நெருக்கடியைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மே 11 ஆம் திகதி 50 வீதமான சேவைகளே தொடங்கும். பின்னர் வரும் வாரங்களில் அது அதிகரிக்கப்படும். பொதுப்போக்குவரத்துகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக இருக்கும். கைகளை சுத்திகரிக்கும் ‘ஜெல்’ களை விநியோகிப்பது குறித்த சாத்தியப்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை பரிஷியன் செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.
22-04-2020
(நன்றி குமாரதாஸன்)