பிரான்ஸில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை கடந்த வாரத்தில் 5,000-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தின் பின்னர் ஒரு வாரத்தில் பதிவான குறைந்தளது தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.
நேற்று வெள்ளிக்கிழமை நாட்டில் 4,935 புதிய தொற்று நோயாளர்கள் பதிவானதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுடன் நாட்டில் தொற்று உறுதி செய்யப்படடவர்களின் மொத்த எண்ணிக்கை 7.02 மில்லியனாக உயர்ந்துள்ளது.
நேற்று மேலும் 49 கொரேனா மரணங்கள் பதிவான நிலையில் நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 116,739 ஆக அதிகரித்துள்ளது.
வசந்த காலத்தில் மூன்றாவது சமூக முடக்கலுக்குப் பின்னர் பிரான்ஸில் சராசரி புதிய தினசரி தொற்று நோயாளர் தொகை கடந்த ஜூன் இறுதிக்குள் 2,000 க்கும் குறைவாகப் பதிவானது.
ஆனால் டெல்டா திரிவு மீண்டும் எழுச்சி பெற்ற நிலையில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் தினசரி தொற்றாளர் தொகை 24,000 வரை மீண்டும் அதிகரித்தது.
இதனையடுத்து உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கட்டாய தடுப்பூசி அட்டை நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சின் தடுப்பூசி நடவடிக்கைகளும் எழுச்சிபெற்ற நிலையில் தொற்று நோயாளர் தொகை படிப்படியாக மீண்டும் வீழ்ச்சியடைந்து வருகிறது.