பிரித்தானியாவில் இந்து கோவிலுக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆகத்து மாதம் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியபோது இரு அணி ரசிகர்களும் மோதிக்கொண்டனர். அதன் பின்னர் பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கோவில் கட்டிடத்தின் மேல் ஏறிய நபர் ஒருவர், காவி கொடியை கீழே இயக்கியுள்ளார். அதனை கீழே நிற்கும் சிலர் வரவேற்று ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை லீசெஸ்டர்ஷையர் பொலிஸார் விசாரணையில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து, இந்திய சமூகத்திற்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடுமையான வார்த்தை அறிக்கையை வெளியிட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் 15 பேரை பொலிஸார் முதற்கட்டமாக கைது செய்தனர். மேலும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை முழங்கியபடி இந்து குழுக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகின. மேலும் லெய்செஸ்டரில் உள்ள இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதாக குற்றச்சாட்டும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஸ்மெத்விக் பகுதியில் கோவில் ஒன்றுக்கு வெளியே சுமார் 200 பேர் கொண்ட போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், ஸ்பான் லேனில் உள்ள துர்கா பவன் இந்து மையத்தை நோக்கி ஏராளமான மக்கள் அணிவகுத்துச் செல்வதைக் காட்டியது.
அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில் லெய்செஸ்டர் கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லீசெஸ்டரில் உள்ள ஒரு மசூதியின் படிக்கட்டில் இந்து மற்றும் இஸ்லாம் சமூகங்களின் தலைவர்கள் ஒன்று கூடி பொறுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். “ஆத்திரமூட்டல் மற்றும் வன்முறை” உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.