பிரித்தானியாவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாதுகாப்பு கருதி, லண்டனில் யூத பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்த நிலையில், தற்போது காஸா மீது கண்மூடித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது இஸ்ரேல். இதன் பிரதிபலிப்பாக லண்டனில் யூத மக்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் அந்த சமூக தலைவர்களிடையே எழுந்துள்ளது.
இதனையடுத்தே, லண்டனில் யூத பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரையில் இந்த பாடசாலைகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, நாளை லண்டனில் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த பாலஸ்தீன் ஆதரவு மக்கள் தயாராகி வரும் நிலையில், யூத பாடசாலைகள் மூடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு எதிராக உலக மக்கள் கொதித்தெழ வேண்டிய நாள் என ஹமாஸ் படைகளின் நிறுவனர்களில் ஒருவர் உலகமெங்கிலும் உள்ள பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்டோபர் 13ம் திகதி யூதர்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நாள் என Khalid Mashal அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவரையும் கைது செய்ய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரித்தானியாவில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இஸ்ரேலில் ஹமாஸ் முன்னெடுத்த கொடூர தாக்குதல்களை பிரித்தானியாவில் மக்கள் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில், யூத பாடசாலைகள் மற்றும் ஜெப ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அவசர நிதியுதவியாக 3 மில்லியன் பவுண்டுகள் தொகையை பிரதமர் ரிஷி சுனக் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 2023- 2024 காலகட்டத்தில் யூத சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 18 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட உள்ளது. இதனிடையே, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.