பிரித்தானியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை!

You are currently viewing பிரித்தானியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை!

அரசு சாதனங்களில் இருந்து சீன செயலியான டிக் டாக்-கை உடனடியாக தடை செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பயனர்களின் தரவுகள் சீன அதிகாரிகளால் பயன்படுத்தப்படலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்ற அச்சத்தை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ்(Bytedance) நிறுவனத்தின் சமூக ஊடக செயலியான டிக்-டாக் மேற்கத்திய நாடுகளால் தடை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்து இருக்கும் நிலையில், இந்த வரிசையில் தற்போது அரசாங்க சாதனங்களில் இருந்து சீனாவுக்கு சொந்தமான வீடியோ செயலியான TikTok மீதான பாதுகாப்பு தடையை பிரித்தானியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரித்தானியாவின் அலுவலக அமைச்சர் ஆலிவர் டவுடன் நாடாளுமன்றத்தில் வழங்கிய தகவலில், டிக்டாக் செயலிக்கு எதிரான பாதுகாப்பு தடையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமான அரசாங்க தரவு தொடர்பாக மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் அபாய மதிப்பீட்டை நிபுணர்கள் நடத்திய நிலையில், அரசு சாதனங்களில் இனி அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள பயன்பாடுகள் மட்டுமே அணுக அனுமதிக்கப்படும் என ஆலிவர் டவுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய அறிவிப்பின் அடிப்படையில், சீனாவின் சமூக ஊடக செயலியான டிக்-டாக், பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் பயன்படுத்தும் “அரசு கார்ப்பரேட் சாதனங்களில் பதிவிறக்க அல்லது பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் டிக்-டாக் மீதான இந்த தடை தனிப்பட்ட சாதனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் பயனர்கள் எச்சரிக்கையாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply