2023ம் ஆண்டு மே 15ம் திகதி பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற “இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளை வழிகாட்டியாகக்கொண்டு, தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறைமையையும் மீளுறுதி செய்துகொள்கிறோம்.
சிறிலங்காவின் ஒற்றையாட்சி யாப்பிற்கு உட்பட்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலம் தமிழ்மக்க்ளின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான அதிகாரப்பகிர்விற்கு இடமளிக்கவில்லை என்பதன் அடிப்படையில் அதனை முழுமையாக நிராகரிக்கிறோம்.
சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்கள், நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், கட்டமைக்கப்பட்ட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை சிரத்தையுடன் கவனத்திலெடுத்து, தமிழ்த் தேசத்து மக்களாகிய நாங்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வழிகாட்டலின்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இறைமைக்குமான போராட்ட்த்தைத் தொடர்வோம் என மீளுறுதி செய்துகொள்கிறோம்.
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவுமாறு ஐ.நா. சபையைக் கோருகிறோம்.
சிறிலங்கா அரசினால் அதன் இராணுவத்தின் உதவியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மனிதவுரமை மீறல்கள் கட்டமைப்புசார் இனவழிப்பு நடவடிக்கைகள், நில அபகரிப்பு, இனத்துவரீதியான திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆகிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அவசிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திடம் அவசரமான வேண்டுகோளை விடுக்கிறோம்.
ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம்