பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்துவது மற்றும் சிலவற்றுக்கு தடை விதிப்பது குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விரிவான தீய விளைவுகள் குறித்த ஆதாரங்களுடன் அமைச்சர்கள் வரும் ஜனவரியில் கூடி விவாதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்கள் தனிப்பட்ட விவாதங்களில் இருப்பதால் ஆதாரங்கள் குறித்த பெயர் குறிப்பிடபடாமல் உள்ளது. அதே சமயம் அவை இன்னும் விவாதங்களின் தொடக்க நிலையில் இருப்பதால் இவை நிறைவேற்றப்படாமலும் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து இருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கமிலா மார்ஷல், குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பரிசீலனையில் உள்ள தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
பொதுமக்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பயனர்களுக்கு பயனர் சேவை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பை அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் பிரித்தானியா ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.