துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் கொல்லப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த 640 ஆண்டுகளில் பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 46,000 என பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பிராந்தியங்களில் மட்டும், இந்த எண்ணிக்கையில் சரிபாதி பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் கடந்த 640 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பூகம்பம் தொடர்பிலான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நார்ஃபோக் மற்றும் எசெக்ஸ் பகுதியில் இந்த மாதம் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவில் 3.7 மற்றும் 2.6 என பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பில்லை எனவும், இருப்பினும் ஆண்டுக்கு 300 நிலநடுக்கங்கள் வரையில் பதிவாகி வருவதாகவும் நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
இதில் 20 முதல் 30 எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் மட்டுமே உண்மையில் மக்கள் உணரும் வகையில் இருக்கும் எனவும் கூறுகின்றனர். ஆனால் 1931ல் மிக மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 6.1 என அது பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரையில் இருந்து 60 மைல்கள் கடலுக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததால், கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதியில் கட்டிடங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 10,000 நிலநடுக்கங்கள் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளது. மட்டுமின்றி, பிரித்தானியாவின் மான்செஸ்டர், பிளாக்பூல், ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட், மான்ஸ்ஃபீல்ட் மற்றும் கார்ன்வாலில் உள்ள க்வீக் ஆகிய பகுதிகள் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் மிகுந்த பகுதி என கண்டறியப்பட்டுள்ளது.
வேல்ஸில் லின் தீபகற்பம், ஸ்காட்லாந்தில் எடின்பர்க், கிளாக்மன்னன், நோய்டார்ட் தீபகற்பம் மற்றும் டம்ஃப்ரைஸ் ஆகிய பகுதிகளும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதியாகும்.
ஆனால், கிழக்கு ஸ்காட்லாந்து, வடகிழக்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நிலநடுக்கத்திற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பிரித்தானியாவின் பிரதான நிலப்பரப்பை விட வட கடல் அதிக நில அதிர்வு பகுதியாக உள்ளது.