பிரித்தானியா ஏனைய யுத்தகுற்றவாளிகள் மீதும் தடை விதிக்க வேண்டும் – ICPPG அடுத்த கட்ட நடவடிக்கையில்!

You are currently viewing பிரித்தானியா ஏனைய யுத்தகுற்றவாளிகள் மீதும் தடை விதிக்க வேண்டும் – ICPPG அடுத்த கட்ட நடவடிக்கையில்!

இலங்கை யுத்த குற்றவாளிகள் மூவர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்தமையை அடுத்து, இந்த வெற்றியின் பிண்ணனில் கடுமையாக உழைத்த  பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG), தனது அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்

யுத்த குற்றவாளிகளான இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா கடந்த 24 மார்ச் 2025 அன்று தடை விதித்திருத்தது.

2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights Sanction Regime) கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) பல வழிகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தது.

ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சிலவாவுக்கு எதிராக 50 பக்க ஆவணந்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருந்தது. அதுபோலவே ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்தது.

அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால் பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பலவழிகளில் முன்னெடுத்து வந்தது.

அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களின் மூலம் முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது.

கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற கடந்த தேர்தலின் போது, தமிழ் இளையோரை ஒருங்கிணைத்து, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தடையை அறிவிக்கவேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது.

ஆயினும் ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சி இதனை நடைமுறைப்படுத்த தாமதித்ததால், ICPPG இந்த போராட்டத்தை தொடர்ந்து வந்ததுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விட்டிருந்தது.

ITJP, Redress, Sri Lanka Campaign, Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களையும் இணைத்து, ICPPG நடாத்திய  இந்த இடைவிடாத பன்முகப்பட்ட போராட்டத்தின் விளைவாகவே, பிரித்தானிய அரசு இலங்கை யுத்தகுற்றவாளிகளை  தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவித்தது.

இது இலங்கையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தப்பிவந்தவர்கள், சித்திரவதை அனுபவித்தவர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் இளையோரின் இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும் என ICPPG அறிவித்திருந்து. அத்துடன் இது இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டந்தில் ஒரு ஆரம்பப்படி மட்டுமேயாகும் என்றும் ICPPG தெளிவு படுத்தியிருந்தது.

இதேநேரம், இந்த வெற்றியின் பின்னால்  உழைத்த ICPPG அமைதியாக தனது அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, அனைத்து குற்றவாளிகளுக்கும் இந்த தடைகளை விரிவுபடுத்த வேண்டும், போர்க்குற்றவாளிகள் இராஜதந்திர பதவிகளை வகிப்பதைத் தடுக்க வேண்டும், இனப்படுகொலை குறித்த ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை ஆதரிக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பிரேரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து, அடு்த்தகட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply