ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்யாவின் (Russia) அதி நவீனப் போர்க்கப்பல் ஒன்று ஆங்கிலக் கால்வாய் அருகே போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் Admiral Golovko என்ற அதி நவீன போர்க்கப்பல் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதன் ஒருபகுதியாக ஆங்கிலக் கால்வாயில் கடந்து சென்றுள்ளது.
Severomorsk தளத்தில் இருந்து 11 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ள கப்பலானது ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முன்னர் பேரண்ட்ஸ் கடல், நோர்வே மற்றும் வட கடல்கள் வழியாக பயணம் செய்துள்ளது.
குறித்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள ஏவுகணையானது ஒலியை விட பல மடங்கு வேகத்தில் சுமார் 900 கிமீ பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புதிய திட்டத்தின் அடிப்படையில் உருவாக்க முடிவு செய்துள்ள 10 கப்பல்களில் ஒன்றான குறித்த கப்பலை எந்த அதி நவீன ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் அதனை சுட்டு வீழ்த்துவது கடினம் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இந்த அதி நவீனப் போர்க்கப்பல் ஆங்கிலக் கால்வாயில் போர் பயிற்சி முன்னெடுத்துள்ளதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) ஆகியோர் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து ரஷ்ய போர் கப்பல் ஆங்கிலக் கால்வாய் அருகே போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, இந்த நடவடிக்கையானது, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா இந்த போர் பயிற்சியில் ஈடுப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.