பிரித்தானியாவில் யூனிவர்சல் கிரெடிட்டில் குடும்பங்களுக்கான கூடுதல் உதவியை அரசாங்கம் அகற்றியதால், ஒரு வருடத்தில் கூடுதலாக 600,000 குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-22ல் ஏழ்மை நிலையில் வாழும் சிறார்களின் எண்ணிக்கை 4.2 மில்லியன் என அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 71 சதவீதம் பேர்கள் குறைந்த பட்சம் ஒருவர் வேலை செய்யும் வீடுகளில் வசித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் யூனிவர்சல் கிரெடிட் திட்டமூடாக வாரத்திற்கு 20 பவுண்டுகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர்கள் அந்த தொகையை ரத்து செய்த நிலையில் பல குடும்பங்கள் இழப்பை எதிர்கொண்டன.
வடக்கு கிழக்கில், 2015 முதல் ஏழு ஆண்டுகளில் வறுமையில் உள்ள குழந்தைகளின் விகிதம் 26% இல் இருந்து 35% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு மிட்லாண்ட்ஸில் 30% முதல் 38% ஆகவும், கிழக்கு மிட்லாண்ட்ஸில் 25% முதல் 33% ஆகவும் உயர்ந்தது.
கொரோனா பெருந்தொற்று, தொடர்ந்து விலைவாசி உயர்வு ஆகியவை அதிக எண்ணிக்கையிலான சிறார்களை பசிக்கும் வெப்பமூட்டப்படாத வீட்டில் தங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
இதனால், ஒரு கொள்கை மாற்றம் நேரடியான மற்றும் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இரண்டு குழந்தைகள் என்ற வரம்பை நீக்கினால், 250,000 குழந்தைகள் உடனடியாக வறுமையிலிருந்து விடுபடுவார்கள்.
அரசாங்கம் அந்த முடிவை உடனையே முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.