பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் பேரலையுடன் தமிழீழமே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி பேரெழுச்சியுடன் நேற்று (04/02/2024) நடைபெற்றது.
இன்றைய நாள் (05.02.2024) பிரித்தானிய பிரதமருக்கும்,வெளிவிவகார அமைச்சுக்கும்,பிரித்தானிய மன்னருக்கும் தமிழர் தரப்பினரால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமையினை மீள் வலியுறுத்திய கடிதம் வழங்கிவைக்கப்பட்டது
பிரித்தானிய பேரரசிடமிருந்து சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை எமது தாயகமான தமிழீழ தேசம், சிங்களப் பேரினவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அன்று மறுக்கப்பட்ட நீதி, இன்று வரை மிகப்பெரிய இனஅழிப்பை தமிழினம் சந்தித்து நிற்கிறது. பிரித்தானியா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழர்கள் ஏதிலிகளாக வாழும் நிலையை உருவாக்கியது.
ஆகவே தமிழீழ மக்களுக்கு தன்னாட்சி ஒன்றே தீர்வு என்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில், தன்னாட்சி உரிமைப் போராட்டம் பிரித்தானியாவில் நேற்று (04.02.2024 ) ஐரோப்பிய நேரம் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி சிங்கள பேரினவாத அரசின் தூதுவராலயம் முன்பு மக்கள் கொட்டொலிகளுடன் பிரித்தானியப் பேரரசின் மன்னர் மாளிகை நோக்கி, தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழீழத் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியுடன் நகர்ந்தது
அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட இப்போராட்டம் அனைத்துலகத் தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு ,பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இப்போராட்டத்தில் ஐரோப்பிய ரீதியில் அணிதிரண்ட தமிழர்களின் கொட்டொலிகளால் லண்டன் மாநகரம் அதிர்ந்தது. மாபெரும் மக்களலை லண்டன் மாநகரை அதிரச்செய்ததோடு ,தமிழீழ தன்னாட்சியுரிமை உரிமையினை மீண்டும் உலகறியச் செய்துள்ளது.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களே எங்கள் தலைவர் என்றும் தமிழீழமே எங்களின் நாடென்றும் சிங்கள அரசின் சுதந்திர நாள் தமிழீழத்தின் கரிநாள் என்றும் சிங்கள பேரினவாத அரசின் சனாதிபதி ஒரு இனப்படுகொலையாளி என்றும் விண்ணதிர முழங்கியவாறு பிரித்தானிய வீதிகளில் பேரணியாக சென்ற தமிழர்கள் சர்வதேச சமூகத்திற்கும் பிரித்தானிய அரசிற்கும் அவர்களின் மொழியில் உரத்துச் சொல்லப்பட்ட போராட்டமாக இது அமைந்திருந்தது.
மேலும் கட்டுப்படுத்த முடியாத மக்கள் வெள்ளத்துடன் பிரித்தானியக் காவற்துறை போராடிக்கொண்டிருந்த நிலையில் குறித்த இப்பேரணியானது பிரித்தானிய மன்னர் மாளிகையை அண்மித்ததும் மக்கள் பேரலையைக் கட்டுப்படுத்த முடியாத காவற்துறை திண்டாடியது.
ஒட்டுமொத்தத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இம்மாபெரும் மக்கள் போராட்டமானது தமிழர்களின் வேணவா தமிழீழமே என்பதை முரசறைந்து நின்றது என்பதே நிதர்சனமானது
தொடர்ந்தும் அனைத்துலரீதியில் நடாத்தப்படும் அனைத்துப் போராட்டவடிவங்களிலும் மக்கள் பேரெழுச்சியோடு ஒன்றிணைந்து, மாவீரர்களின் இறுதி இலட்சியமான தமிழீழத் தனிநாட்டை மீட்டெடுப்போமென உறுதியெடுத்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்
இப்போராட்ட நிறைவில் அனைத்துலக இராதந்திர கட்டமைப்பின் பிரித்தானியா செயற்பாட்டாளரின் உரை ஆங்கிலத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து யேர்மனி நாட்டினைச் சார்ந்த வேற்றின அரசியற் செயற்பாட்டாளர் ஒருவரின் உரை மற்றும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.பொ.மகேஸ்வரன் அவர்களின் எழுச்சியுரையும் இடம்பெற்று இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு தாயகம் நோக்கிய பயணத்திற்கு உறுதிமொழி எடுத்து இந்த பேரணி எழுச்சியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இன்று 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கொள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் ஆகியவை இணைந்து பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் வழங்கியதோடு, பிரித்தானிய அரசாட்சியில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவே தமிழினம் இன்று வரை சந்தித்து வரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கு காரணமாக அமைந்து வருகின்றது என்பதையும் வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டியது

























