பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்குமிடையிலான எல்லையில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்குமிடையிலான சுரங்கவழி “Eurotunnel” மூடப்பட்டுள்ளதால், அங்கு காத்திருக்கும் பாரவூர்திகளின் சாரதிகள் பொறுமையிழந்துள்ளதாகவும், காவல்துறையினரோடு கைகலப்பில் ஈடுபட முனைந்துள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.
இதேவேளை, கடல்வழி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இறங்குதுறைகளிலும் நிலைமை பதற்றமாகவே இருப்பதாகவும், கடல்வழி போக்குவரத்து மீளத்திறக்கப்படும்வரை அங்கு ஏராளமான வாகனங்கள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடல்வழிப்போக்குவரத்து நிகழும், கரையோர நகரமான பிரித்தானியாவின் “Dover” நகரில் குவிந்துவரும் பாரவூர்திகள் மற்றும் வாகனங்களின் நெரிசல்களை குரைப்பதற்காக, “Dover” லிருக்கும் கைவிடப்பட்ட விமானநிலையமொன்றின் ஓடுபாதையில் வாகனங்களை தரித்து வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவுக்கும், பிரான்ஸ் ஊடான ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான விமான / தொடரூந்து போக்குவரத்துக்கள் சிறியளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிறிதொரு செய்தி வந்துள்ள நிலையில், எனினும், பொதுமக்கள் எல்லைகளை கடக்கும்போது “கொரோனா” வைரஸுக்கான பரிசோதனை செய்திருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்க்கெனவே வந்திருந்த பிரான்ஸை சேர்ந்த பரவூர்தி சாரதிகள் மீண்டும் பிரான்ஸ் திரும்புவதற்கு எதுவாக, அவர்களுக்கான விரைவு “கொரோனா” பரிசோதனைகளுக்கான சாதனங்களை பிரான்ஸ் வழங்கியிருந்ததாகவும், இந்த விரைவு சோதனைகளின் பெறுபேறுகளுக்காக 30 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்றும், இவ்விரைவு சோதனைகளில் திருப்தியில்லாவிடின் வழமையான பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்றும், இதன் முடிவுகளுக்காக 24 மணிநேரம் காத்திருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கட்டுப்பாடுகள், பாரவூர்தி சாரதிகளை சினமடைய வைத்துள்ளதாகவும், தடைகளை மீறி பிரான்ஸ் எல்லைக்கும் நுழைய அவர்கள் முற்பட்ட வேளையிலேயே காவல்துறையினரோடு கைகலப்புக்களும் ஏற்பட்டதாகவும் மேலும் அறிய முடிகிறது.