பிரித்தானியாவில், கத்திக்குத்து தாக்குதலை நடத்தியதை அடுத்து, காவல்த்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சுடேஸ் அமானின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், இலங்கையில் அவரது உறவினர்கள் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பிரிட்டனின் ஹரோ பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலேயே இவர் வசித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது தாய் மற்றும் நான்கு சகோதரர்களுடன் ஹரோவில் வாழ்ந்த வேளை தனது 17 வயதில் அவர் முதன் முதலில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடத்தொடங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்பிரல் 2018 இல் அவரது நடவடிக்கைகளை அறிந்த காவல்துறையினர் மே மாதத்தில் அவரை கைது செய்துள்ளனர்.
அவ்வேளை அவரது கணனியையும் கையடக்க தொலைபேசியையும் ஆராய்ந்த அதிகாரிகள் சுடேஸ் அமான் குண்டுகளை தயாரிப்பது,பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வது குறித்த ஆவணங்களை தரவிறக்கம் செய்துள்ளதை கண்டுபிடித்தனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
தாயாரின் சமையலறையில் எவ்வாறு குண்டுகளை தயாரிப்பது,இராணுவ கத்தியை பயன்படுத்தி போரிடுவது, பிரேசில் கத்தியை பயன்படுத்துவது போன்ற விடயங்களை அவர் தரவிறக்கம் செய்துள்ளார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
அமான் தனது குடும்பத்தவர்கள்,நண்பர்கள், காதலியுடன் தனது தீவிரவாத கொள்கைகள் குறித்து கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார், கத்தியை பயன்படுத்தி தனது தாக்குதலை மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் காதலியுடனான இணைய உரையாடலின் போது நீங்கள் ஐஎஸ் அமைப்பிற்கு விசுவாசமாகயிருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளதாகவும்,அசிட் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாகவும் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் என அமானிடம் நீதிபதி தண்டனை வழங்கியவேளை தெரிவித்திருந்தார்.
குண்டுகளை விட நீங்கள் கத்தியை பயன்படுத்த விரும்புகின்றீர்கள் உங்கள் வீட்டிற்கு கத்தி விநியோகிக்கப்படுவதை விரும்பினீர்கள் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 2017 இல் அமான் ஐஎஸ் அமைப்பின் தலைவரின் படத்தை பதிவு செய்திருந்தார் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
இன்னொரு செய்தியில் அவர் தனது காதலியை அவரின் பெற்றோர்களின் தலையை துண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன