மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. மன்னர் சார்லஸ் புரோஸ்டேட் புற்றுநோய் தொடர்பில் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் தற்போது அவருக்கு இன்னொருவகை புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய சிகிச்சையின் போது தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த வகை புற்றுநோய் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. திங்கட்கிழமை முதல் அவர் வழக்கமான சிகிச்சைகளை முன்னெடுப்பார் என்றே அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கையில் மன்னர் சார்லஸ் தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூடிய விரைவில் முழுமையான பணிக்கு திரும்புவதை எதிர்நோக்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், மன்னருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் நிலை பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை. 75 வயதான மன்னர் சார்லஸ் திங்கள்கிழமை காலை நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாமில் இருந்து லண்டன் திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளிநோயாளியாக சிகிச்சையைத் தொடங்கினார் என்று அரண்மனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மட்டுமின்றி, தமக்கு புரோஸ்டேட் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது குறித்தும் மன்னர் சார்லஸ் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
2022 செப்டம்பர் 8ம் திகதி முதல் ஆட்சியில் இருந்துவரும் மன்னர் மூன்றாம் சார்லஸ் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில் சிகிச்சையின் ஒருபகுதியாக அவர் பதவி விலக நேர்ந்தால், அடுத்த பட்டத்து இளவரசருக்கு முடி சூட்டப்படும். புத்தாண்டுக்கு முந்தைய நாள் டென்மார்க்கின் ராணியார் Margrethe II தாம் முடி துறக்க இருப்பதாக அறிவித்தார்.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து டென்மார்க்கின் பட்டத்து இளவரசர் Frederik மன்னராக முடி சூட்டிக்கொண்டார்.
அதேப்போன்று, மன்னர் சார்லஸ் சிகிச்சை காரணமாக பதவி விலக நேர்ந்தால், அவரது மகன், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மன்னராக முடி சூட்டப்படுவார். அவரது மகன் இளவரசர் ஜார்ஜ் அடுத்த மன்னருக்கான இடத்திற்கு முன்னேறுவார்.
தற்போது மன்னர் சார்லஸால் சிகிச்சை காரணமாக அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் போனால் பட்டத்து இளவரசர் வில்லியம் அந்த கடமைகளை ஏற்கலாம், அத்துடன் அவருக்கு உதவியாக அரச குடும்பத்தில் இருந்து 4 பேர்கள் செயல்படலாம்.
அதில் இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனிடையே, மன்னர் சார்லஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள இளவரசர் ஹரி, அமெரிக்காவில் இருந்து லண்டன் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.