*மே 11 ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள அனுமதிப் படிவ கட்டுப்பாடு எதுவும் இன்றி மக்கள் நடமாட முடியும். வதிவிடத்தில் இருந்து 100 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் செல்லவேண்டிய தேவை இருப்பின் அதற்கு மட்டும் அனுமதி பெற வேண்டும்.
*பொது இடங்களில் 10 க்கு மேற்படாமல் ஆட்கள் ஒன்று கூடமுடியும். ஆனால் சுகாதார விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
*உணவகங்கள், அருந்தகங்கள் தவிர்ந்த எல்லா வர்த்தக நிலையங்களும் மே 11 ஆம் திகதி திறக்கப்படும்.
*40 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட தரை அளவைக் கொண்ட வணிக வளாகங்கள் (centre commercial) திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
பிரெஞ்சுப் பிரதமர் எத்துவா பிலிப் இன்று இத்தகவல்களை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மே 11 ஆம் திகதி முதல் நாட்டை வழமை நிலைமைக்கு நகர்த்துவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பெரும் திட்டம் தொடர்பாக நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கமளித்தார்.
இத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் இதற்கான ஒப்புதல் பெறப்படவுள்ளது.
அதற்கு முன்பாக திட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்களை பிரதமர் தனது உரையில் வெளியிட்டார். அவற்றில் சில வருமாறு :.
*வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோர் 14 நாட்களுக்கு வீட்டிலோ விடுதிகளிலோ தனிமைப்படுத்தப்படுவது தொடரும். குடும்பத்தில் ஒருவர் தொற்றுக்குள்ளானால் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*சிகையலங்கரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்கள் மே 11 முதல் திறக்கப்படும்.
*2019 – 2020 காலப்பகுதிக்குரிய பருவகால விளையாட்டு நிகழ்வுகள் குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டிகள் ஏதுவும் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
*பொதுச் சந்தைகள் அனைத்தும் மீள இயங்க அனுமதிக்கப்படும். சுகாதார விதிமுறைகள் பேணப்படுவதைப் பொறுத்து அந்தந்த பகுதி மேயர்கள் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டு அனுமதியுடன் இவை இயங்கும்.
*பெரிய அளவில் தொற்றினால் பாதிக்கப்படாத இடங்களில் பூங்காக்கள் திறக்கப்படும்
*பெரிய அருங்காட்சியகங்கள், சினிமா, நாடக தியேட்டர்கள், கலை அரங்குகள் மே 11 க்குப் பின்னரும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சிறிய அருங்காட்சியகங்கள், நூலகங்கள் என்பன திறக்கப்படும்.
*நாடு முழுவதும் பாலர், ஆரம்ப பாடசாலைகளை (maternelles et de l’école) மே 11 திறக்கப்படும். நிலைமையின் முன்னேற்றம் மற்றும் சுயவிருப்பத்தின் பேரில் அவை இயங்கலாம்.
*நடுத்தர(colleges) உயர்தர (6ème et la 5ème) வகுப்புகள் படிப்படியாக நிலைமையைப் பொறுத்து மே 18 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்படும்.
*உயர்கல்லூரிகளைத் (Lycées) திறப்பது பற்றி மே மாத இறுதியில் தீர்மானிக்கப்படும்.
*பாடசாலைகள் தொடங்கினாலும் மே 11 க்குப் பின்னரும் இரு வாரங்களுக்கு விளையாட்டுச் செயற்பாடுகள் எதுவும் நடைபெறாது.
*குழந்தைகள் காப்பகங்கள் இயங்கும். பத்துக்கு மேற்படாத எண்ணிக்கையில் பராமரிக்க அனுமதி.
*மத நிகழ்வுகளை நடத்துவது ஜூன் 2 ஆம் திகதிவரை தொடர்ந்து தடுக்கப்பட்டிருக்கும்
*சகல மயானங்களும் மே 11 திறக்கப்படும். ஆனால் இறுதிச் சடங்குகளில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை 20 ஆக வரையறுக்கப்படும்.
*கடற்கரைகளுக்குச் செல்வது ஜூன் முதல் திகதிவரை தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும்.
*70 வீதமான பொதுப் போக்குவரத்துகள் மே 11 முதல் இயங்கும். பஸ்கள், மெற்றோ, ரயில் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
இந்த தகவல்களை பிரதமர் வெளியிட்டுள்ள போதிலும் நிலைமையைப் பொறுத்து பிராந்திய ரீதியாக இவற்றை நடைமுறைப்படுத்துவதில் மேலும் மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-04-2020 (குமாரதாஸன்)