பிரெஞ்சு இராணுவ அதிகாரிகளை தாக்குவோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் ராணுவத்தின் எந்த அதிகாரியும் உக்ரைனில் இருந்தால், நிச்சயம் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு பிரான்ஸ் இராணுவ பயிற்சியாளர்களை அனுப்பலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில் ரஷ்யாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
ஆனால், தற்போது உக்ரைனுக்கு உதவுவதற்கு பிரான்ஸ் இராணுவ வீரர்களை அனுப்புவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் உக்ரைன் சமீபத்தில் பிரான்சுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஒரு செய்தி மாநாட்டின் போது பேசிய ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், “அவர்கள் பிரெஞ்சு ஆயுதப் படைகளின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது கூலிப்படையினராக இருந்தாலும் சரி, அவர்கள் முற்றிலும் எங்கள் இலக்காக மாறுவார்கள்” என்று கூறினார்.
கடந்த மாதம், உக்ரைன் உதவி கேட்டால், தனது படைகளை அங்கு அனுப்பலாம் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியிருந்தார். இதற்கு ஒரு நாள் கழித்து, பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனும், உக்ரைன் விரும்பினால், ரஷ்யாவை தாக்க பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.
இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதற்குப் பிறகு, மே 28 அன்று, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் உக்ரைனில் சண்டையிடுவதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களை பிரான்ஸ் அனுப்புவதாகவும் புடின் கூறியிருந்தார். இந்த கூலிப்படையினர் என்ற போர்வையில், உக்ரைனுக்கு உதவி செய்யும் நிபுணர்களும் உள்ளனர் என்று கூறினார்.
இந்நிலையில், நாளை (ஜூன் 6), D-Dayவின் 80 வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தன்னுடன் கலந்து கொள்வார் என்று அவர் கூறினார்.
அப்போதுதான் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது தொடர்பான தகவல்களை மக்ரோன் பகிர்ந்து கொள்வார்.