கிளிநொச்சி–தர்மபுரம் ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளிக்கொணர்ந்த வைத்திய பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. எனினும் மாபியாக்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாது தனது கடமையை செவ்வனே செய்துவரும் மருத்துவருக்கு ஆதரவாக பலரும் குரல்கொடுக்க முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பதிவிட்ட கருத்து பல்லரையும் ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்ட பதிவில்,
நான் சுதந்திரத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டவள். எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் அடங்கிப் போவதையோ யாரையும் அடக்கி ஆள்வதையோ, வாழ்வின் அவமானமாகக் கருதுகிறவள்.
அதிகார குரலுக்கோ, அடிதடிக்கோ, உணர்வுப் பூர்வமான அச்சுறுத்தலுக்கோ சற்றும் சுருங்கி விடாதபடி மிக மிக திடமான மூளையையும் உடலையும் செதுக்கி வைத்திருக்கிறேன். பெண் என்ற முறையில் என் உடல் குறித்தோ, அதன் உறுப்புகள் குறித்தோ எவ்வித பயமோ, எரிச்சலோ, வேதனையோ, தாழ்வு மனப்பான்மையோ எனக்கில்லை.
குறிப்பாக அகங்காரம், கோபம், பொறாமை, கூச்சம், நாணம் போன்றவற்றின் எச்சமாக என்னை ‘நான்’ சுமந்து திரிவதில்லை. சுமையில்லாத மனமும், உடலும் இருப்பதாலேயே என்னால் சிரிக்க முடிகிறது. மிக சத்தமாக, மிக மிக சத்தமாக….
எத்தகைய வளைவுக்குள்ளும் நெளிந்து வெளியேறவும், நீள்கோடுகளில் நீண்டு மீளவும் வட்டங்களுக்குள் வளைந்து சுற்றவும் நான் கற்றது பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்திடமிருந்து.
தன்னை சுதந்திரமாக வைத்துக் கொள்கிறவர்கள், பிறரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பார்களானால், அங்கு சமத்துவம் இருக்கும் என்பது என் நம்பிக்கை… உடலளவில் தங்களை சுதந்திரப் படுத்திக் கொள்ளும் பலர், சிந்தனை அளவில் இன்னும் குறுகிய வட்டத்துக்குள் தான் இருக்கிறார்கள் என மருத்துவர் பிரியந்தினி பதிவிட்டுள்ளார்.