பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டனாவ் தீவு, அந்த நாட்டின் 2-வது பெரிய தீவு ஆகும். இந்த தீவை நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
அந்த தீவில் அதிக மக்கள் தொகையை கொண்ட தவோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் தவோ நகரில் இருந்து 61 கி.மீ. தென்மேற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
அதேபோல் அலுவலகங்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தவர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேறி திறந்தவெளி மைதானங்களில் குவிந்தனர்.
தவோ, மாட்டனாவ் ஆகிய நகரங்களில் அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.
நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்ததோடு, பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன.
தவோ நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதே போல் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
நிலநடுக்கம் தாக்கிய தவோ நகரில்தான் அந்த நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அவர் தனது மகளுடன் வீட்டில் இருந்தார்.
எனினும் அவர்கள் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் நலமாக இருப்பதாகவும் அதிபரின் செய்தி தொடர்பாளர் சால்வடார் பான்எலோ தெரிவித்துள்ளார்.
அதே போல் அதிபரின் மனைவி ஹோனிலெட் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, நிலநடுக்கத்தில் சிக்கி அவரது கார் குலுங்கியதாகவும் எனினும் காயங்கள் இன்றி அவர் உயிர் தப்பியதாகவும் சால்வடார் கூறினார்.
இந்த நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் எரிமலை மற்றும் பூவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாடு, புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்திருப்பதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
கடந்த அக்டோபர் மாதம் இதே மின்டனாவ் தீவில் 6.0 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் 20 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.