85 பாதுகாப்பு படையினரை ஏற்றிச்சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து வருகிறது.
எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து 40 பேர் வரை இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா தெரிவித்தார். விமானத்தில் சிக்கியுள்ள ஏனையோரையும் மீட்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவா் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் தெற்கு சுலு மாகாணத்தில் உள்ள மலை நகரமான பாட்டிகுலில் உள்ள ஒரு கிராமத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது.
தெற்கு ககாயன் டி ஓரோ நகரத்திலிருந்து படையினரை ஏற்றிச் சென்ற இந்த விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுக விமானத் தளத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது என பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா தெரிவித்தார். விமானம் ஓடுபாதையைத் தவறவிட்டதே விபத்துக்குக் காரணம். தவறை உணர்ந்து விமானி மீண்டும் விமானத்தை சடுதியாக மேலே எழுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து விமானம் மோதி தீப்பற்றியதாகவும் அவா் கூறினார்.
எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து 40 பேரைக் காப்பாற்றியுள்ளோம். ஏனையோரையும் காப்பாற்ற தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா தெரிவித்தார்.
முஸ்லிம்களை அதிகளவில் கொண்டுள்ள சுலு மாகாணத்தில் அரசாங்கப் படைகளுக்கு அபு சயாஃப் போராளிகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இங்கு கடமையின் நிமிர்த்தம் படையினரை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த பலர் அண்மையிலேயே தங்களது பயிற்சியை முடித்து இராணுவ அக்கடமியில் இருந்து வெளியேறியவர்கள் எனத் தெரியவருகிறது.