கிழக்கு மாகாணத்தில் செயற்படும் பிள்ளையானின் குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அந்த ஆயுதங்களை தன்னால் கண்டுபிடித்து தர முடியும் எனவும் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர். பிரபா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகக் கூறப்படும் அல்பதா, அரியாத் மற்றும் ஜியாத் போன்ற குழுக்களிடம் காணப்படும் சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்களையும் தன்னால் கண்டுபிடித்து தர முடியும் என அவர் கூறுகிறார்.
அரசாங்கத்தால் தனது குழுவினருக்கு 10 கைத்துப்பாக்கிகளை வழங்கினால் அந்த ஆயுதத் தொகையை கண்டுபிடிக்க முடியும் என ஈரோஸ் தலைவர் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அவர் இந்த நூலை லண்டனில் வாழும் ஞானம் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் எழுதியிருக்கலாம். பிள்ளையான் பற்றிய பல தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாக நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்போது, அந்தச் சிறைச்சாலையில் இருந்த சஹாரானின் உறவினர்கள் என்று கூறப்படும் இருவருடன் தான் நட்பு வைத்திருந்ததாக பிள்ளையானே தெரிவித்திருந்தார்.
அந்த இரண்டு பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என பிள்ளையான் சந்தேகிப்பதாகவும் கூறியிருந்தார். அப்படியென்றால் பிள்ளையான் இத்தனை நாள் கோமா நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாரா? இன்று கிழக்கு மாகாண மக்கள் வறட்சியில் உணவின்றி தவித்து வருகின்றனர்.
ஆனால் ஆட்சியாளர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகமாக உள்ளன.
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டுக்கு கிடைத்துள்ள ஒரு பாக்கியம். இன்னும் ஐந்து வருடங்களுக்கு அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார் என எதிர்பார்க்கிறோம்.
அவரால் மட்டுமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அவரால் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிக்க முடியும். சர்வதேச உறவுகளின் அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே உள்ளது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.