கொரோனா வைரஸால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓர் அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. புங்குடுதீவுப் பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அரச அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாவின் தீவிரம் காரணமாக யாழ். மாவட்டத்தில் இன்று அவசரமாக மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றோம். இந்தக் கூட்டத்துக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மற்றும் சுகாதார திணைக்கள வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, கடற்படையின் உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சபை ஆகிவற்றின் பிரதிநிதிகள் போன்றோர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இன்றைய செயலணிக் கூட்டத்தில் மிகவும் முக்கியமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
கம்பஹா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டு வருகின்றார்கள்.
அங்கு பணிபுரிந்த இரு பெண்கள் விடுமுறையில் புங்குடுதீவுக்கு வந்துள்ளார்கள்.
கடந்த 30ஆம் திகதி மற்றும் இம்மாதம் மூன்றாம் திகதிகளில் இருவரும் வந்துள்ளார்கள். அவர்களில் 3ஆம் திகதி வந்தவருக்குக் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவருடைய நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புங்குடுதீவுப் பகுதியில் அதாவது கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 57 பேர் போக்குவரத்தில் மற்றும் ஏனைய இடங்களில் அந்தப் பெண்ணுடன் தொடர்புபட்டனர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதைவிட நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்தவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 88 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதைவிட மருதங்கேணிப் பகுதியில் குடாரப்பு கிராமத்திலே 73 நபர்கள் அங்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
9 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பட்டுள்ளார்கள். இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 22 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
எங்களைப் பொறுத்தவரைக்கும் புங்குடுதீவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள காரணமாக ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்தப் பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்திலே யாழ். மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஓர் அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே, அபாயகரமான சூழல் என்று நாங்கள் தற்போது கருதப்பட வேண்டிய புங்குடுதீவு பகுதி முற்றுமுழுதாக முடக்கப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஏனைய பகுதிகளிலும் சில செயற்பாடுகளை அரசினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கி இருக்கின்றோம் அல்லது தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றோம்.
அந்தவகையிலே பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதனுடன் இணைந்த வகையில் தனியார் கல்வி நிலையங்களை இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். அதற்குரிய அறிவுறுத்தல்கள் உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் எங்களுடைய தற்போதைய நிலையில் அரச அலுவலகங்கள் இயங்கலாம். அதேநேரத்தில் வர்த்தக நிலையங்கள் இயங்கலாம். ஆனாலும்கூட அனைவருக்கும் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுகாதார நடைமுறைகளைப் பேணிச் செயற்படுமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு துறையினரும் அதாவது தனியார் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், ஓட்டோ சாரதிகள், பஸ் உரிமையாளர்கள், அரச பஸ் சேவையைச் சேர்ந்தவர்கள், சினிமா திரையரங்கைச் சார்ந்தவர்கள், திருமண மண்டபத்தை வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு சுகாதார வழிகாட்டிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம். அந்த வழிகாட்டல்களை முறையாக அமுல்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்.
ஒவ்வொருவரும் இந்த இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். அந்த விடயம் தொடர்பில் கண்காணிக்குமாறு பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளோம்” – என்றார்.