இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிவழித் தீர்மானம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு நிறைவுக்கு வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.
இந்தப்பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப்பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் மற்றும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையுமாறு வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் மாதவ்மாஸ்டர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகியன காரணங்களால் அப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தையின்போது, புதிய கூட்டணியை அமைத்தல், பொதுச்சின்னத்தை தெரிவு செய்தல், ஆசனப்பங்கீடு உள்ளிட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளன.
அதேநேரம், ஜனநாயகப் போராளிகள் தரப்பினை ஒரு தரப்பாக உள்ளீர்ப்பதா இல்லை ஆசன ஒதுக்கீடுகளின் ஊடாக உள்வாங்குவதா பற்றியும், அனந்தி சசிதரன் மற்றும் ஐங்கரநேசன் உள்ளிட்ட தரப்புக்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.