புதிய நாடாக உதயம் ஆகிறது போகன்வில் தீவு.!

  • Post author:
You are currently viewing புதிய நாடாக உதயம் ஆகிறது போகன்வில் தீவு.!

உலக நாடுகள் பட்டியலில் புதிதாக இணையவுள்ளது போகன்வில். ஆஸ்திரேலியாவின் வடக்கில், பப்புவா நியூ கினி நாட்டின் தீவுகளுள் ஒன்று போகன்வில். ஐக்கிய நாடுகள் சபை நடத்திய பொது வாக்கெடுப்பில், சுதந்திர ஆட்சிக்காக, அந்த தீவின் குடிமக்கள் 98 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்குச் செலுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வடக்கில் அமைந்திருக்கிறது பப்புவா நியூ கினி தீவு. இதன் ஒரு பகுதியாக உள்ளது போகன்வில் தீவு. பப்புவா நியூ கினி, போகன்வில் ஆகிய பிரதேசங்கள் காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. ஆஸ்திரேலியாவிடமிருந்து பப்புவா நியூ கினி 1975-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அப்போது போகன்வில் தீவும் பப்புவா நியூ கினியிடம் அளிக்கப்பட்டது. போகன்வில் பெரும்பாலும் பழங்குடி மக்கள் வாழும் தீவு. மக்களின் எதிர்ப்பையும் மீறி பப்புவா நியூ கினியுடன் இணைந்தது போகன்வில் தீவு. 5 ஆண்டுகளில், போகன்வில் தீவுக்கு விடுதலை அளிப்பதாக உறுதியளித்தது பப்புவா நியூ கினி. இன்றுவரை அது நடக்கவே இல்லை.

போகன்வில் தீவில் தங்கம், தாமிரம் ஆகியவை அதிகளவில் கிடைப்பதால் சுரங்கங்கள் கட்ட முடிவு செய்தது பப்புவா நியூ கினி. போகன்வில் தீவில் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்தச் சுரங்கம் `பங்குனா’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பங்குகளில் 20 சதவிகிதம் பப்புவா நியூ கினி அரசிடம் உள்ளது. பங்குனா சுரங்கத்திலிருந்து மட்டும், பப்புவா நியூ கினியின் பொருளாதார வளர்ச்சி 45 சதவிகிதம் லாபம் கிடைத்தது. ஆஸ்திரேலியாவின் ரியோ டின்டோ என்ற நிறுவனம் பங்குனாவை நிர்வகித்தது.

பங்குனாவில் பணியாற்றுவதற்காக பப்புவா நியூ கினி தீவுகளில் இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களது மொழி, பண்பாடு முதலானவற்றால் போகன்வில் வாழ் பழங்குடி மக்கள் தங்கள் தனித்த பண்பாடு அழிவதாக அச்சமுற்றனர். மேலும், போகன்வில் தீவில் ஏற்பட்ட சூழலியல் மாற்றங்களும் பழங்குடி மக்களின் எதிர்ப்புக்கு வலுசேர்த்தது. ஆறுகள் வறண்டு போயின; மீன்கள் குறைந்தன. அரிய வகை வௌவால் இனம் அழிந்தது.

1988-ம் ஆண்டு முதல் போகன்வில் தீவில் வன்முறை வெடிக்கத் தொடங்கியது. போகன்வில் காப்பர் நிறுவனத்தில் பணியாற்றிய, பழங்குடி மக்களுள் ஒருவரான பிரான்சிஸ் ஒனா, தன் உறவினரும் போகன்வில் தீவின் சமூக செயற்பாட்டாளருமான பெபெச்சுவா செரெரோவுடன் இணைந்து சுரங்கங்களுக்கு நிலம் அளித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சூழலியல் பாதிப்புகளுக்காக போகன்வில் காப்பர் நிறுவனம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

காப்பர் நிறுவனம் சூழலியல் பரிசோதனை மேற்கொள்ள நியூசிலாந்து நிறுவனம் ஒன்றை வரவழைத்தது. அது வெளியிட்ட அறிக்கையில், போகன்வில் தீவின் ஜபா நதி மாசு அடையவில்லை எனக் கூற, பிரான்சிஸ் ஒனா சட்டபூர்வமான வழிகளில் நம்பிக்கை இழந்தார். ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிய அவர், தனது அமைப்புக்கு `போகன்வில் புரட்சிகர ராணுவம்’ எனப் பெயரிட்டார். சுரங்கத்தைத் தாக்குவது, அதன் மின்சாரத்தை முழுமையாகத் துண்டிப்பது, ஆயுதங்கள் திருடுவது என பிரான்சிஸ் ஒனாவின் அமைப்பு செயல்பட, ஆஸ்திரேலியாவும் பப்புவா நியூ கினியும் 1990-ம் ஆண்டு சுரங்கத்தைவிட்டு காலிசெய்து, போகன்வில் தீவுகளைவிட்டு வெளியேறின.

பப்புவா நியூ கினி அரசும் காப்பர் நிறுவனமும் ஆற்றுப்படுகை, சுரங்கத்தின் நடவடிக்கைகளால் மாசு அடையவில்லை எனவும் வௌவால் இனம் அழிவதற்கு சுரங்கம் காரணம் இல்லை எனவும் போகன்வில் புரட்சிகர ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தின. நஷ்டஈடாக மிகப்பெரிய தொகை ஒன்றை அளிக்கவும் முன்வந்தன. எனினும் அவற்றை நிராகரித்த பிரான்சிஸ் ஒனா, தனி நாடு என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

புதிய நாடாக உதயம் ஆகிறது போகன்வில் தீவு.! 1

பப்புவா நியூ கினி போகன்வில் தீவு மீது பொருளாதாரத் தடை விதித்தது. மேலும், இது உள்நாட்டுப் போராகவும் மாறியது. ஒரு பக்கம் பப்புவா ராணுவத்தை எதிர்கொண்ட போகன்வில் ராணுவம், மறுபக்கம் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகள் காரணமாக மோதிக்கொண்டது. போகன்வில் ராணுவத்தில் ஒரு இனக்குழு ஆதிக்கம் செலுத்துவதாக மற்ற குழுக்கள் கருதின. இந்த மோதலில் பல கிராமங்கள் எரிக்கப்பட்டன; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெறும் 2 லட்சம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட போகன்வில் தீவில் நடந்த 10 ஆண்டுக்கால உள்நாட்டுப் போரில் 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1997-ம் ஆண்டு, ஆஸ்திரேலியா அரசும், நியூசிலாந்து அரசும் போகன்வில் தீவில் அமைதி நிலவுவதற்காக வேண்டுகோள் விடுத்ததோடு, அதற்காக இருதரப்பிலும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. 1998-ம் ஆண்டில் அமைதிக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. போகன்வில் தீவுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதோடு, 2015 முதல் 2020-ம் ஆண்டுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும், பிரான்சிஸ் ஒனா அமைதி ஒப்பந்தம், பேச்சுவார்த்தை எதிலும் கலந்துகொள்ளவில்லை. பங்குனா சுரங்கப்பகுதியும், சில கிராமங்களும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. 2004-ம் ஆண்டு, தன்னைத்தானே அரசர் என அறிவித்துக்கொண்ட பிரான்சிஸ் ஒனா, 2005-ம் ஆண்டு மலேரியா நோய் தாக்கி இறந்தார்.

புதிய நாடாக உதயம் ஆகிறது போகன்வில் தீவு.! 2

2001-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போகன்வில் தீவு பொது வாக்கெடுப்பு, கடந்த வாரம் நடத்தப்பட்டது. போகன்வில் குடிமக்கள் ஏறத்தாழ 1.8 லட்சம் பேர் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில், சுதந்திரம், சுயாட்சியை அதிகரித்தல் ஆகிய இரண்டு வாய்ப்புகள் மக்கள் முன் வைக்கப்பட்டன. இதில் 98 சதவிகிதம் பேர் போகன்வில் தனிநாடாக வேண்டும் என வாக்களித்தனர். பொது வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, போகன்வில் தீவு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பாடல்கள் பாடினர்.

பொது வாக்கெடுப்பில் வெற்றிபெற்றாலும், பப்புவா நியூ கினி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முழு விடுதலை கிடைக்கும். மேலும், அந்தச் செயல்திட்டம் முழுமையாக நிறைவேற இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என போகன்வில் தீவு மக்கள் கருதுகின்றனர். எனினும் பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது, போகன்வில் தீவு மக்களின் பல ஆண்டுக்கால நம்பிக்கையை உண்மையாக்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள