இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள மிகமோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச்சட்டமூலத்தின் பெரும்பாலான சரத்துக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்து பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக்கொண்ட செயன்முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே அமைந்திருப்பதாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஃபியோனுவாலா ஆலெய்ன், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நியலெற்சொஸி வோல், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலொர், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா செயற்பாட்டுக்குழுவின் தலைமை அறிக்கையாளர் ஓவா போல்டே, உப அறிக்கையாளர் கேப்ரியெல்லா சிற்ரோனி மற்றும் உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மார்க்ரெற் சற்றர்த்வெய்ற், சட்டவிரோத அல்லது தன்னிச்சையான கொலைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மொரிஸ் டிட்போல்-பின்ஸ், மத அல்லது நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் நஸிலா கானியா மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஐரின் கான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சுயாதீன மேற்பார்வையிலும் நிலவும் குறைபாடுகளின் விளைவாக தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டமானது சர்வதேச சட்டத்துக்கு முரணானவகையில் அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களாலும் ஏனைய சர்வதேச பல்தரப்புக் கட்டமைப்புக்களாலும் பல வருடகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இருப்பினும் இக்குறைபாடுகளை தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் நிவர்த்திசெய்யவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தவறான பிரயோகம் மற்றும் அதனூடாக வழங்கப்பட்டுள்ள மட்டுமீறிய அதிகாரங்கள் என்பன நாட்டிலுள்ள அரசியல் விமர்சகர்களையும், எதிர்ப்பாளர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது என்ற கரிசனை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. பலர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் எவ்வித வழக்கு விசாரணைகளுமின்றி பல வருடகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி திருத்தங்களுடன்கூடிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது மனித உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியவகையில் உள்ளடக்கியிருக்கவேண்டிய முக்கிய காரணிகளை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். ‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கான வரைவிலக்கணத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைத்தல், இச்சட்டம் குறிப்பாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்பவற்றைப் பாதிக்குமாயின் அவ்வேளையில் அச்சட்டத்தைப் பிரயோகிப்பதற்கான அவசியத்தன்மை, தன்னிச்சையான முறையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதைத் தடுத்தல், சித்திரவதைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்களைத் தடுப்பதற்கு அவசியமான சரத்துக்கள் உள்ளடங்கியிருப்பதை உறுதிசெய்தல், நியாயமான வழக்கு விசாரணை செயன்முறையை உறுதிசெய்தல் என்பன அக்காரணிகளில் உள்ளடக்கியிருந்தன.
இருப்பினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மாறுதல்களே செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக உத்தேச சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ள ‘புதிய பயங்கரவாதக்குற்றங்கள்’ மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.
அதேபோன்று புதிய சட்டமூலத்தின் பிரகாரம் குறைந்தளவிலான நீதிமன்ற மேற்பார்வையும், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்தளவிலான அதிகாரங்களும் கவலையளிக்கின்றன. குறிப்பாக ‘குற்றமிழைத்திருக்கக்கூடும்’ என்ற சந்தேகத்தில் ஒருவரைக் கைதுசெய்யும்போது பின்பற்றப்படவேண்டிய செயன்முறைகள் தொடர்பான சரத்துக்கள் இச்சட்டமூலத்தில் வலுவிழக்கச்செய்யப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேகநபர்கள் சித்திரவதைகளுக்கும், முறையற்ற நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான போதியளவு அதிகாரங்கள் இச்சட்டமூலத்தின் ஊடாக நீதிவானுக்கு வழங்கப்படவில்லை.
எனவே இது (பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம்) மிகவும் பின்னடைவான நடவடிக்கை என்பதுடன் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படுத்தலைப் புறக்கணித்திருக்கின்றது. அத்தோடு இதன் சரத்துக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்து பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்குப் பின்பற்றப்படவேண்டிய சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக்கொண்ட செயன்முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே அமைந்துள்ளன.
இலங்கையின் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அடிப்படை மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியது நீண்டகாலத்தேவைப்பாடாக இருக்கின்றது. அதன் இறுதி எல்லையை அடைவதற்கான பாதையை (செயற்திட்டத்தை) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்சார் நிபுணர்கள் வகுத்தளித்துள்ளனர். ஆகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மனித உரிமைகள் மற்றும் உரியவாறான செயன்முறைகள் சார்ந்த குறைந்தபட்சத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.