முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் குறித்த தொழிற்சாலையின் ஏற்பாட்டில் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் இருபது தொற்றாளர்கள் பிசிஆர் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றின் தீவிரத் தன்மையை அடுத்து அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியை குறித்த நிறுவனமே முன்னெடுத்திருக்கின்றது.
ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களும் நிர்வாகிகளும் குறித்த பரிசோதனைக்கு தற்போது உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
ஒவ்வொரு பணியாளருக்கும் பத்தாயிரம் ரூபா பணம் செலவிடப்பட்டு குறித்த பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டினை குறித்த நிறுவனமே மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.
இதன் அடிப்படையில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான செலவீட்டில் குறித்த பரிசோதனைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
இன்று பிற்பகல் 3.00 வரையான நிலவரத்தின் படி 450 பேருக்கும் அதிகமானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 200 ஐக் கடந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆடைத் தொழிற்சாலை புதுக்குடியிருப்பில் காணப்படுகின்ற போதிலும் அதில் பணியாற்றுபவர்கள் வன்னியின் பல்வேறு கிராமங்களைச்சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை, முரசுமோட்டை தொடக்கம் வன்னியின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்கள் அங்கு பணியாற்றுவதற்காக வாகனங்களில் அழைத்துவரப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதேவேளை பொதுப் போக்குவரத்துக்களையும் அவர்கள் பயன்படுத்திவருகின்றனர். இதனால் இன்று பிற்பகல் 3.00 வரையில் அடையாளம் காணப்பட்டவர்களைத் தாண்டி இன்னமும் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக்கூடிய சூழல் காணப்படுவதாக தெரியவருகிறது.
இதனால் வன்னியின் பல பகுதிகளில் தொற்றுப் பரவல் ஏற்பட்டிருக்கக்கூடிய அபாய நிலை உணரப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களைத் தவிர அவர்களுடைய உறவினர்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ எவருக்கும் தொற்றுப் பரவக்கூடிய இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மக்களும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களை மட்டுமல்லாது உங்களைச் சார்ந்திருக்கின்ற சமூகத்தையும் காப்பாற்ற முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்