சென்னை மெரினாவில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கில் திரளுவார்கள். இந்த ஆண்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கருதி கடற்கரை மணலில் இறங்க பொதுமக்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை.
இதனால் காமராஜர் சாலையில் திரண்டு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். ஆனாலும் கடற்கரை மணலில் கால்பதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்துள்ளார்கள்.
அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் நேற்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் திரள தொடங்கினார்கள்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. அண்ணா சதுக்கம், மெரினா காவல் சரகத்தில் கூடுதல் பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணா சதுக்கம் பகுதியில் உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் ஆகியோரும் மெரினா பகுதியில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
அண்ணாசதுக்கம் பகுதியில் சுமார் 75 ஆயிரம் பேரும் மெரினா பகுதியில் 25 ஆயிரம் பேரும் திரண்டு இருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பல குழந்தைகள் காணாமல் போனது. இதனால் பெற்றோர்கள் தவித்தனர்.
ஒரு குடும்பத்தில் பேத்தி காணாமல் போனது. அதை தேடி சென்ற பேரனையும், பாட்டியையும் காணவில்லை. இப்படி மொத்தம் 30 பேர் காணாமல் போனார்கள்.
அவர்களை பொலிஸார் தேடி கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனால் கண்ணீரில் தவித்தவர்கள் ஆனந்த கண்ணீருடன் வீடுகளுக்கு திரும்பினார்கள்.