புதிய வகை கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பரவப் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. இதே போன்று 2019 கடைசியில் தான் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியது. அதே போல் தற்போதும் சீனாவில் கொரோனா வைரஸ் திரிபு பரவி வருகிறது. அதுவும் கோடிக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாகவும், ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் முன்பு பின்பற்றிய கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.