வடக்கில் பிரிவினைவாதமோ கிழக்கில் தீவிரவாதமோ தோன்றி நாட்டில் அச்சத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனத் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு பிரிவினைவாதம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்த போதும், ஒரு சில தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரிவினைவாத சிந்தனைக்கு தொடர்ச்சியாக நிதியுதவியளிக்கின்றனர். இதை நாம் தடுக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொவிட் -19 க்கு பின்னரான மறுமலர்ச்சி – இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி’ எனும் தொனிப்பொருளில் ‘ஹரிமக அமைப்பினால்’ இலங்கை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இந்த நாட்டில் ஒருபோதும் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கப் படமாட்டது என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்’ என அவர் இதன்போது தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :-
புலனாய்வு அமைப்புகளை மறுசீரமைத்து அதற்கமைய பாதுகாப்பு தொடர்பில் கரிசனை பிரிவினை வாத சிந்தனைகள், தீவிரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியன பாதுகாப்புக்கு முக்கிய சவால்களாகும்.
நாட்டில் குற்றச்செயல்களை குறைக்க சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் போதைபொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது முக்கியம் நாட்டின் அபிவிருத்திற்கு தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொள்ளாமல் ஒரு நாட்டை முன்னேற்றுவதும் அபிவிருத்தி செய்வதும் சாத்தியமற்றது என அவர் தெரிவித்தார். நாட்டிற்கு தேவையான நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தேசிய பாதுகாப்பின் அவசியம். தேசிய பாதுகப்பை நிலை நிறுத்துவதே நாட்டின் அபிவிருத்தி இலக்கை நோக்கிய திசையாகும்.
2009ஆம் ஆண்டு பிரிவினைவாதம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்த போதும், ஒரு சில தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரிவினைவாத சிந்தனைக்கு தொடர்ச்சியாக நிதியுதவியளிப்பதை நாம் தடைசெய்ய வேண்டும்.
போருக்குப் பின்னரான காலங்களில் புலிகளின் முன்னாள் போராளிகள் 12,242 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். புலிகள் இயக்கத்தின் சில மீதமுள்ள அமைப்புக்கள் நிதி சேகரிக்கும் நோக்கில் அவர்களின் பிரிவினைவாத சிந்தனையை தூண்டி அதற்கு மேலும் உரமூட்டும் வகையில் செயற்படுகின்றனர்.
2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைத்தபோதும், பொறுப்பானவர்கள் அதன் பாரதூரமான விளைவுகள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை இதனால் சுமார் 290 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்கவும் சுமார் 500 பேர் காயமடைவதை தடுக்கவும் தவறிவிட்டது.
எமது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டமை மற்றும் புலனாய்வுத் துறையில் உள்ளோர் வெளியேறியமை என்பன தீவிரவாதிகள் சுதந்திரமாகவும் கட்டமைப்பாகவும் செயற்படுவதற்கு வழிசமைத்தது.
கடந்த வாரம் கூட, நாம், 1.5 கிலோகிராம் உயர் ரக வெடிபொருட்கள் மற்றும் 90 டெட்டனேட்டர்களை மன்னார் பிரதேசத்திலிருந்து கைப்பற்றியுள்ளோம். அத்தோடு, ஒரு சில தொலை கட்டுப்பாட்டு கருவிகளும் (ரிமோட் கொன்ட்ரோலர்கள்) எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் நாம் பராமுகமாக செயற்பட்டிருந்தால் இவைகளை எம்மால் மீட்டிருக்க முடியாது.
வடக்கில் பிரிவினைவாதமோ கிழக்கில் தீவிரவாதமோ நாட்டில் அச்சத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
சிறைச்சாலைகளிலிருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தலை இல்லாமல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றக்கூடிய திறமைமிக்க அதிகாரிகளை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆகியவற்றிற்கு நாம் நியமித்துள்ளோம்.
மோசமான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறை வைக்கபட்டுள்ள பூசா மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் நலன்புரி நடவடிக்கைப் பிரச்சினைகள் தொடர்பகவும், அளவுக்கதிகமாக காணப்படும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கைகளை குறைப்பது தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது.
போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளோர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெடுப்புக்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இதற்கமைய 1000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளைக் கொண்ட விஷேட நிலையம் ஒன்று நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 2,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று வீரவில பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வு, விஷேடமாக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இதற்கான விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. – எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் காவல்த்துறை விஷேட அதிரடிப்படையின் கட்டளைத்தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய, மற்றும் ஹரிமக நிறுவனத்தின் தலைவர் கனிஷ்க டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.