நாட்டின் தெற்கு கரையோரங்களில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை சமாளிக்கும் பொருட்டு இத்தாலி அரசாங்கம் ஆறு மாத கால தேசிய அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து, 5 மில்லியன் யூரோ தொகை ஒதுக்கப்பட்டதற்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் அவரது அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புலம்பெயர் மக்களின் நெரிசலைக் குறைக்க, அவசரமாக அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவசர நிலை பிரகடனம் அவசியமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முகாம்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதால், புதிதாக கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்தாலிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொரோனா பெரும் தொற்றின் போதும் இத்தாலிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனம் செய்திருந்தது.
இதனால் நிதி மற்றும் விதிமுறைகளுக்காக அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் தேவை ஏற்படாது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே 31,000 புலம்பெயர் மக்கள் இத்தாலிய ராணுவ படகுகளால் அல்லது தொண்டு நிறுவனங்களின் கப்பல்களால் அல்லது எந்த ஆதரவும் இன்றி இத்தாலியில் நுழைந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது முந்தைய இரு ஆண்டுகளை ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிகம் என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரே ஒரு நாளில் மட்டும், 26 புலம்பெயர் மக்களின் படகுகள், சிசிலிக்கு தெற்கே உள்ள சிறிய இத்தாலிய தீவான லம்பேடுசாவை அடைந்தன.
அங்குள்ள முகாமானது சுமார் 350- 400 பேர்களுக்கு மட்டுமே போதுமானது. ஆனால் சமீபத்தில் அங்கே 3,000 பேர்கள் தங்குவதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்விவகார அமைச்சரின் கணக்கின்படி, இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் ஐவரி கோஸ்டிலிருந்து வந்துள்ளனர், அதைத் தொடர்ந்து கினியா, பாகிஸ்தான், எகிப்து, துனிசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.