டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 நிகழ்வுகள்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில்களில்களில், மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து வணக்கம் செலுத்தினர்.
எமது விடுதலைக்காய் வித்தானவர்களின் உணர்வுகள், இலட்ச்சியத்தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையுடன் புனித தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன அந்தவகையில் மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, எமது தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 2023 மாவீரர் நாளுக்கான உத்தியோகபூர்வ கொள்கை பகுப்பு அறிக்கை ஒலியலை மூலம் ஒலிபரப்பப்பட்டது.
சரியாகத் தாயக நேரம் மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தி முதன்மைச்சுடர் ஏற்றியவுடன், தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் இன் உயிர்களை ஆகுதியாக்கிய எம் தேசப் புதல்வர்களின் கல்லறைக்கு மாவீரர் குடும்ப உறவுகள் சுடரேற்றியவுடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
தொடந்து முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தேசநிலா இசைக்கலைஞர்கள் மாவீரர் கானம் இசைக்க மாவீரர் குடும்பத்தினர், மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினர் மற்றும் பொதுமக்களாலும் மலர் வணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வில் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள், நோர்வே தமிழ்முரசம் வானொலியின் பணிப்பாளர் மனோ நாகலிங்கம், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஆகியோரின் சிறப்புரைகளுடன், மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் மாணவர்கள் ஆசிரியர்களின் கவிதைகள், பேச்சுக்கள், பாடல்கள், கருத்துக்களம் மற்றும் எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து டென்மார்க்கின் நடன ஆசிரியர்களின் கலைக்கல்லலூரி மாணவர்கள் வழங்கிய நடனங்களுடன், கலைபண்பாட்டுக் கழகம் தயாரித்து வழங்கிய “Operation எல்லாளன்” நாடகமும் இடம் பெற்றது.
தொடர்ந்து அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் இணையவழியில் நடாத்தப்பட்ட அனைத்துலக மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி 2023இல், டென்மார்க்கில் இருந்து கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவர்கள் மதிப்பளிக்கபட்டனர்.
அனைத்து நிகழ்வுகளும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்தியதுடன் மக்களுக்கு எழுச்சியையும் ஊட்டியதாக அமைந்தன.
தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.
மாவீரர்களின் தியாகம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை, அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை இளையோரின் கைகளி்ல் உள்ளது. அத்துடன் தமிழீழம் என்ற இலக்கை அடையும் வரை அயராது செயற்பட வேண்டுமென, இன்றைய நாளின் செயல்பாடுகளின் ஊடாக இளையோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேந்தப்பட்டு,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
நெதர்லாந்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2023
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2023 திங்கள் அல்மேரா பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. 12.45 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, பின் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்கள் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். பின் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரையும் தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்தின் கொள்கை வகுப்பு உரையும் இடம்பெற்றது.
பின்னர் சரியாக 13:35 இற்கு மணியொலி எழுப்பப்பட்டு தொடர்ந்து அகவணக்கமும் அதனைத்தொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிக்க கனத்த இதயத்துடன் மாவீரர் குடும்பங்கள் தங்கள் உறவுகளின் திருவுருவப் படங்களிற்கு விளக்கேற்ற அதனைத்தொடர்ந்து வந்திருந்த அனைத்துத் தமிழ் உறவுகளும் அந்தத் தியாகச் செம்மல்களை மனதில் சுமந்தபடி மலர்வணக்கம் செலுத்தினர்.அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை நாடகம் எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.
மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு சுமார் 19.00 மணியளவில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு பின் நம்புங்ள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.
தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது அனைத்துக்கட்டமைப்புகளுடன் தமிழீழ தேசிய மாவீரர்நாள் எழுச்சி பூர்வமாக 27.11.2023 இன்று சிறப்புடனும் எழுச்சி பூர்வமாகவும் நினைவு கூரப்பட்டது. பாரிசின் புறநகர் பகுதியான ஒபவில்லியே நகரத்தில் அமைந்துள்ள லெப். கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் துயிலுமில்லம் முன்பாகவும், சார்சல் 95 ( மாவட்டத்தில் ) தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதற்களப்பலியான லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாகவும், கடற்புலிகளின் நினைவாக செவரோன் நகரத்திலும், 1300 மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மசிபலெஸ் என்னும் இடத்தில் பெரிய மண்டபத்திலும், பிரான்சின் ஏனைய 11 மாவட்டங்களிலும் தேசிய மாவீரர்நாள் எழுச்சிபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
ஒபவில்லியே லெப். கேணல். நாதன், கப்டன் கயன் துயிலுமில்லத்தில் பொதுச்சுடரினை கனி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. தேவா அவர்கள் ஏற்றி வைக்க கப்டன். கயன் அவர்களின் சகோதரர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர்.
கேணல். பரிதி துயிலுமில்லத்தில் பொதுச்சுடரினை செல் சங்கத்தின் தலைவர் திரு. சுரேஸ் அவர்கள் ஏற்றி வைக்க ,ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை சின்னவீரனின் தாயார் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மக்கள் காந்தள் மலர்கொண்டும் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செய்திருந்தனர்.
மஸ்சிபலெஸ் மண்டபத்தில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உப தலைவர் திரு. பரா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை கடற்கரும்புலி. மேஜர். ஈழவீரனின் சகோதரர் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். மாவீரர் நினைவு சுமந்து ஈகைப் பெரும்;சுடரினை 1984 ஆம் ஆண்டு பொலிகண்டிப் பகுதியி சிங்கள இராணுவத்தின் சுற்றிவளைப்பில் அமைப்பின் ரகசியம் காக்க முதன்முதலில் சனையிட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை பகின் ( செல்வன்) அவர்களுடைய சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க. அனைத்து மாவீரர் பெற்றோர்கள் சகோதரர்கள் தமது பிள்ளைகளின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி வைக்க மாவீரர் பாடல் ஒலிபரப்பாகியது. தொடர்ந்து மலர் வணக்கத்தை 29.112008 ஆனையிறவு வடபோர் முனை கண்டல் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தமிழ் இன்பனின் தாயாரும், 05.06.2000 ல் சுண்டிக்குளம் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலி. மேஜர். மணிவண்ணனின் சகோதரி துயிலுமில்ல மாவீரர் நினைவுப்பீடத்திற்கும் தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்ல கல்லிற்கும், மண்ணிற்கும் முன்பாகவும் ஒளியேற்றி வைத்தனர்.
தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. நிகழ்வில் கலைபண்பாட்டுக்கழகத்தால் நவம்பர் மாதம் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்டவர் தமது பேச்சுக்களை அவ்வப்போது பேச, மாவீரர்கள் நினைவு சுமந்த பாடல்களை கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள் வழங்கியிருந்தனர், தொடர்ந்து மாவிரர் நினைவுப்பாடல்கள், எழுச்சிப்பாடல்களுக்கான நடனங்கள் மாணவ மாணவிகளால் வழங்கப்பட்டது. அனைத்துலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரம் பேசும் காற்று இறுவெட்டும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு வெளியிட்ட விலைபோகாத வீரம் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர் நாள் சிறப்புரையை தமிழீழ மக்கள் பேரவைப் பேச்சாளர் திரு. மோகனதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். இவிறி சூசென் முந்நாள் அரசியல் ஆலோசகர் டேவிட் போவே அவர்கள் உரையாற்றியிருந்தார்.
தாயகத்திலே மாவீரர்கள் துயிலுமில்லங்களில் எவ்வாறு அந்தப் புனிதர்களின் நினைவுகளை தாங்கி எமது மக்கள் நின்றார்களோ அதோபோல இங்கும் உணர்வுடன் தங்கள் பிள்ளைகள், பெரியவர்கள், இளையவர்கள் வந்து கலந்து உணர்வு மேலிட்டவர்களாய் நின்றிருந்தனர். மண்டபத்திலும், மாவீரர் துயிலுமில்லங்கள் நிறுவப்பட்டதோடு தேசியக் கொடிகளுடன் எழுச்சி நிறங்களான மஞ்சள், சிவப்பு கொடிகளுடன் எழுச்சிபூர்வமாக காணப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் நாள் முழுதும் அடைமழைக்கு மத்தியிலும், நீண்டதூரம், வாகனங்களிலும், பேரூந்துகளிலும், தொடரூந்திலும் வந்து பெருமளவில் கலந்து கொண்டு அந்த உன்னத மாவீரர்களுக்கு தமது வரலாற்றுக்கடமையை எமது மக்கள் செய்திருந்தனர்.
சம நேரத்தில் பிரான்சின் 95 ஆம் மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதற்கள மாவீரன் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாக பிரான்சு நாட்டினதும் மற்றும் தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை கார்லே கோணேஸ் முதல்வர் ஏற்றி வைக்க, பிரெஞ்சு தேசியக் கொடியை கார்லே கோணேஸ் முதல்வர். பற்றிக் கடாட் Patrick Kaddat அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரரின் சகோதரரும், சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவருமாகிய திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். மாவீரர் நினைவுரைகளை மாநகர முதல் Monsieur le Maire Patrick Kaddat அவர்கள், முதல்வர் Benoit Jimenez Viller Lr Bel ஆலோசகர் Cedric Sabouret முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் Francois Pupponi தமிழீழ மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்களும் உரையாற்றியிருந்தனர். பிரான்சின் கடற்புலிகளால் நடாத்தப்பட்ட நிகழ்விலும் கடற்புலிகள் உறுப்பினர்கள் தமது உன்னத மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக தமது நினைவு வணக்கத்தை உணர்வு மேலிட செய்திருந்தனர்.
பிரான்சின் அனைத்து இடங்களிலும் 09 மாவட்டங்களில் அங்கு வாழும் தமிழீழ மக்கள் தமது இதய தெய்வங்களான மாவீரர்களுக்கு செய்திருந்தனர்.
தமிழீழ மக்களிற்கு சுதந்திரமான கௌரவமான வாழ்வை ஏற்படுத்துவதற்காக, ஓரு கட்டமைக்கப்பட்ட விடுதலை இயக்கமாக, உயரிய இலட்சிய பயணத்தில், தமது குறிக்கோளை எந்த சமரசத்திற்கும் இடமின்றி, இறுதிவரை உறுதியுடன் போராடிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு திங்கட்கிழமை 27-11-2023 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.
பொதுச்சுடரினை இளைய செயற்பாட்டாளர் ராகுல் விஸ்வரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார். இவரது தந்தையாரின் தங்கை மாவீரர் மேஜர் சித்திரா, இவரது தாயின் சகோதரி மாவீரர் லெப்ரினன்ற் தமிழவள் உட்பட இறுதிப் போரில் மேலும் இரு போராளிகளை இழந்த பின்னணியை கொண்டவர் ராகுல் விஸ்வரூபன் ஆவார். தமிழ்ச்செயற்பாட்டாளரும் லேபர் கட்சியின் செயற்பாட்டாளருமான துர்க்கா ஓவன் அவர்கள் அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை லெப்ரினன்ற் கேணல் எழிற்கண்ணன் அவர்களுடைய மகள் கதிரினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் பாலகுமார் பாலகிருஸ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரினை, லெப்ரினன்ற் தாவீதன் என்றழைக்கப்படும் சபாநாயகம் சுபாஸ்கரன் அவர்களின் தம்பி ரம்சி அவர்கள் முதன்மை ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர்களும் மற்றும் உரித்துடையோர்களும் 260 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களை தாங்கிய மாதிரி கல்லறைகளுக்கு ஏற்றிவைத்தனர். முதன்மை ஈகைச்சுடரினை ஏற்றிய ரம்சி அவர்கள், தனது தாய், தந்தை, சகோதரி ஒருவரையும் முள்ளிவாய்க்கால் வலைஞர்மடத்தில் 24-04-2009 சிறிலங்கா அரசின் விமானத் தாக்குதலின்போது இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட அனைவரும் உணர்வு மயமாக மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மாவீரர் நாளிற்கான உறுதிமொழியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பணியகப்பொறுப்பாளர் ஜனா சிவராமலிங்கம் அவர்கள் வாசிக்க, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அதனை மீள உரத்துச்சொல்லி உறுதிமொழி மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து, மலர்வணக்க நிகழ்வு நிறைவடையும் வேளையில், “விண்வரும் மேகங்கள் பாடும்” என்ற தாயகப்பாடலை பாடகர் தேவா அவர்கள் பாடினார். அதனைத் தொடர்ந்து, “மேகம் வந்து கீழிறங்கி …” என்ற பாடலை பாடகர் ஜெய்கரன் அவர்கள் பாடினார். அவர்களோடு “வானம் ஒன்றே வாழ்வென கூறி..” என்ற பாடலை சின்னக்குரலால் கிருஸ்திகா செல்வராசா பாடினார்.
தொடர்ந்து, நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Anthony D’Adams (member of the Legislative Council in the NSW parliament) அவர்களும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் செனற்றர் MS Lee Rhiannon (the former Australian Senator) அவர்களும் கலந்துகொண்டு சிறு உரையாற்றினார்கள்.
தொடர்ந்து, தமிழீழ தாயகத்தில் பாடல்வரிகளை எழுதி, அங்கேயே இசையமைத்து சில பாடல்களையும், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை இணைத்து இன்னும் சில பாடல்களையும் கோர்வையாக்கி, தியாகத் திருவொளிகள் – 2 என்ற பாடற்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது. மேஜர் டயஸ் அவர்களின் அண்ணனும் மூத்த செயற்பாட்டாளருமான தனபாலசிங்கம் அவர்கள் தியாகத் திருவொளிகள் – 2 என்ற பாடற்தொகுப்பை வெளியிட்டு வைக்க, திரு.முத்தரசு கோச்சடை, திரு. புவநேந்திரன் சுதர்சன், திருமதி.சோனா பிறின்ஸ், திரு. ஜெயதீபன், திரு. சுந்தரகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து சிறார்கள் இளையோர்கள் பெரியவர்கள் இணைந்து நடனநிகழ்வை வழங்கினர். மாவீரர் தியாகத்தையும் மக்கள் எழுச்சியையும் வெளிப்படுத்துவதாக நடனநிகழ்வும் தமிழ்க்கலைகள் வெளிப்பாடு மூலம் மாவீரர் வணக்கமும் செலுத்தப்பட்டது சிறப்பாக அமைந்திருந்தது.
இந்நடன நிகழ்வில் கலாநிதி யசோதரபாரதி சிங்கராஜர் அவர்களின் நெறியாள்கையில்:
வைஷ்ணவிப்பிரியா சிவகுமார்
தாரணிப்பிரியா சிவகுமார்
திவாசினி சிவராசா
சஞ்சய் குரு
ரேமாம்ருதா கருணைவேந்தன்
துளசி யசிதரன்
ரியானா ஞானராஜா
ஜெய் குரு
கீதா மனோகரன் மற்றும் பைரவி மனோகரன் அவர்களின் நெறியாள்கையில்
அபிஷயா மதிவதன்
நிதுர்சி செல்வராசா
மோகிதா செல்வராசா
துஜானியா உதயசங்கர்
ரிசான் உதயசங்கர்
தமிழ்நிலா சிவராம்
தமிழ்திவ்யா சிவராம்
அகர்வின் திருச்செல்வம்
அஷ்மித்தா திருச்செல்வம்
கபிசன் நரேஸ்குமார்
சனோசன் செல்வகுமார்
லக்ஷாரா செல்வகுமார்
ஆதிரா அசோக்குமார்
அபிரா அசோக்குமார்
பிரகதி சுனந்தன்
சாமந்தி சிவரூபன்
மாயா யாதவன்
யாரா யாதவன்
டஷ்வின் சிவராசா
அக்சயா கீதன்
பார்த்தீபன் செல்வகணேசன்
ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இவர்களுடன் நிதிவாணன், மிருணாளினி, தமக்க்ஷணா ஆகியோர் தமிழ்க்களரி கலைவடிவத்தை வழங்கியிருந்தனர்.
நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வை உணர்வுபூர்வமாக நினைவுகூருவதற்கும், தாயகத்தில் இந்த ஆண்டு கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான பங்களிப்பை வழங்குவதற்குமான நிதி ஆதரவை வழங்கிய சிட்னி வாழ் தமிழ் வர்த்தகர்கள், முல்லைஓசை அமைப்பினர், கிழக்கின் விருட்சம் அமைப்பினர், வல்வை நலன்புரிச்சங்கம், ஈழத்தமிழ்ச் சங்கம், மற்றும் பல தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டும், பல நாட்களாக மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளில் தங்களை பங்களித்து நின்றும், மாவீரர் நாளில் தங்கள் முழுப்பங்களிப்பையும் வழங்கி நின்றும், நிகழ்வு நிறைவடைந்த பின்னரும் அனைத்து துப்பரவு பணிகளிலும் பங்களிக்க காத்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து, உறுதியேற்றலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
இந்நிகழ்வை திருமதி. நிதர்சினி செல்வகுமார், திரு. யாழவன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் 3000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒருசேர நினைவு கூருகின்ற தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. Burwood East Burwood Reserve மைதானத்தில் 27-11-2023 திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வானது, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. றகு.கிருஷ்ணபிள்ளை மற்றும் இளைய செயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் ஆகியோர்களின் தலைமையில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை ஓய்வுபெற்ற மருத்துவரும் மூத்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளருமான திரு. ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர்களான லெப். கேணல் ஆரம்பன், மேஜர். அருண் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரன் திரு. கவிப்பிரியன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
முதன்மைச்சுடரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்தசெயற்பாட்டாளர் திரு. றமேஸ் பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியாகிய லெப். சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு, மாவீரர் லெப். கீரன் அவர்களது தாயார் திருமதி பூரணம் சின்னத்தம்பி அவர்களும் முதற் பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் வீரவேங்கை ஈழப்பிரியன் அவர்களின் மைத்துனி திருமதி. விநோதினி நடேசானந்தன் அவர்களும் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தார்கள். சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய மாதிரி வடிவக் கல்லறைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தனர். அதேநேரத்தில் துயிலுமில்லம்பாடலும் ஒலிக்க மக்கள் அனைவரும் அந்தப் பாடலோடு ஒன்றித்திருந்தனர்.
அடுத்து மலர் வணக்கம் இடம்பெற்றது.
அடுத்து உறுதியுரையும் அதனைத் தொடர்ந்து மாவீரர் வணக்க நடனமும் இடம்பெற்றது. “கல்லறைமேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே ……..” என்ற பாடலுக்கு நடன ஆசிரியை திருமதி. மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலாயாப்பள்ளி மாணவிகள் வணக்க நடனத்தை அரங்கேற்றினார்கள்.
அடுத்ததாக செல்வி. லோஜிதா அவர்களது “மாவீரம் தமிழீழ மண்ணின் மகுடம்” என்ற தலைப்பிலான பேச்சு இடம்பெற்றது.
அடுத்து மாவீரர் நினைவுகளைச் சுமந்த கவிதை இடம்பெற்றது. இதனை செல்வி. றியா புஸ்பராசா அவர்கள் நிகழ்த்தினார்.
அதனையடுத்து மற்றுமொரு பேச்சு இடம்பெற்றது. “வணங்குகின்றோம் மாவீரர்களே…” என்ற தலைப்பில் செல்வி டாறிக்கா தர்மகீர்த்தி அவர்கள் இந்தப் பேச்சை வழங்கினார்.
அடுத்து மாவீரர் நாள் நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ” நோர்வே அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சமாதான காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களை தாக்கியழித்த சமபவங்களையும் அந்த இரண்டு சம்பவங்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் நினைவுகூர்ந்து, அவ்வாறு மாவீரர்கள் அனைவரும் இவ்வாறு செயற்கரிய தியாகத்தை புரிந்தவர்கள்” என தனது நினைவுரையை நிகழ்த்தியிருந்தார்.
இறுதியாக சமூக அறிவித்தல்களையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு முடிவுரை உறுதிமொழியுடன் இரவு 8.00மணிக்கு தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
மெல்பேர்ண் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்ற பெருந்திரளான தமிழ் மக்கள் வருகைதந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் தமிழீழ தாயகத்தில் பாடல்வரிகளை எழுதி, அங்கேயே இசையமைத்து சில பாடல்களையும், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை இணைத்து இன்னும் சில பாடல்களையும் கோர்வையாக்கி, தியாகத் திருவொளிகள் – 2 என்ற பாடற்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது.
அத்தோடு வழமைபோல, மாவீரர் நாள் வெளியீடுகள் செய்யப்பட்டதுடன் இவ்வாண்டும் மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது.
மிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு 27/11/2023 அன்று மாலை 5.40 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்வை திரு.பிரதீபன் பஞ்சாட்சரம் மற்றும் செல்வி.சங்கீத வாமுதேவன் தொகுத்து வழங்கினர்.
நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடரினை இலங்கை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மற்றும் அடிலெய்டு தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் ஆகியோர் ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது. ஆஸ்திரேலியா தேசியக்கொடியை வூட்வில் நகரசபை உறுப்பினர் திரு. செந்தில் சிதம்பரநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பழங்குடியினர் கொடியினை புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கான வழக்கறிஞர் திருமதி.கேத்தரின் ரஸ்ஸல், (Mrs. Catherine Russell, Advocate for Asylum Seekers and Refugees)அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு.தர்மலிங்கம் கஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து 06.05 இற்கு திரு. கந்தையா பரம்சோதி அவர்களால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. சமநேரத்தில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் மற்றும்
பொதுமக்கள் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து மேடைநிகழ்வுகளாக நடனம், கவிதை, பேச்சு மற்றும் தமிழர்களின் கலையான பறை சிலம்பாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதியாக, நம்புங்கள் தமிழீழம் என ஆரம்பிக்கும் உறுதிமொழி பாடலுடன் மேடை நிகழ்வுகள் நிறைவுபெற்றன. தொடர்ந்து கொடிகள் இறக்கப்பட்டு இராப்போசனத்துடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவுபெற்றன.
தாயக மண்மீட்புப் போரில் காவியமாகி மீளாத்துயில் கொள்ளும் எமது மானமாவீரர்களை 27.11.2023 ஆம் நாள் திங்கட்கிழமையன்று. பெல்சியத்தில் அன்ற்வெப்பன் மாநிலத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லறையில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தியோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் மிகவும் எழுச்சியுடன் பெருந்திரளான மக்கள் ஒன்று சேர்ந்து மாவீரர் நினைவு நாளானது பகல் 12.30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது.
பெதுச்சுடரினை வீரவேங்கை சந்திராவின் சகோதரன் செல்வராசா செல்வதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்சியக் கிளையின் பொறுப்பாளர் திரு . மார்க்கண்டு இரங்கநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவரகளின் மாவீரர் நாள் உரை ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகத்தின் 2023 ஆம் ஆண்டு கொள்கை பகுப்பாய்வு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை லெப்டினன்ற் ஈழவருதியின் தாயார் திருமதி சந்திரவதனா ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய உறவினர்கள் நண்பர்கள் மாவீரர் திருவுருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி உளமுருக வணக்கம் செலுத்தினர்.
சமநேரத்தில் மாவீரர் நினைவுப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்க்கலை அறிக்கூட மாணவர்களின் வில்லுப்பாட்டும் எழுச்சி நடனங்கள் , பாடல்கள் , மற்றும் கவிதைகள் இடம்பெற்றன.
அத்துடன் மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு இடம்பெற்றது. அனைத்துலக தொடர்பகம் சார்பாக யேர்மனியிலிருந்து வருகை தந்த திரு மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்று இறுதியாக தேசியக்கொடி கையேந்தல் செய்யப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் …..”என்ற எழுச்சிப்பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
பின்லாந்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2023
பின்லாந்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது . தமிழீழத் தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தும் , தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2023 இன் நிகழ்வுகள் பின்லாந்தில் மிகவும் சிறப்பாக எழுச்சிகரமாக நடைபெற்றது.
மாவீரர்நாள் நிகழ்வுகள் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை லெப்டினன்ட் பெருமாளின் சகோதரி ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.நாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். தேசியத்தலைவரின் 2008 ஆம்ஆண்டு மாவீர்ர்நாள் உரையைத் தொடர்ந்து , தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத்தொடர்பகத்தின் கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப்பட்டது.
தொடர்ந்து மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள். பொதுமக்களிற்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு,துயிலுமில்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது. முதன்மைச்சுடரினை 2ம் லெப்டினன்ட் இளந்தென்றல்(ஈசன்) அவர்களின் தாயார் திருமதி கி,வள்ளிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க , அனைத்து உறவுகளும் மாவீரர்களிற்கு தீபம் ஏற்றியதோடு,மலர் வணக்கமும் செய்தனர்.
தொடர்ந்து மாவீரர் நினைவுகளைத் தாங்கிய கலைநிகழ்வுகள் இளையோர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலிக்க விடப்பட்டு தேசியக்கொடி கையேந்தலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.