முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (04) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், உரிய தரப்பினரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடி தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் அத்துமீறி அமைக்கப்பட்ட வாடிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ் மீனவர்கள் பன்நெடிங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இத்தகைய சூழலில் மீளவும், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர்.
அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகு தொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டதுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
அத்தோடு அனுமதி பெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகு தொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய மூன்று கிராமங்களிலும் வாழும் தமிழ் மக்களின் ஒரேயொரு மீன்பிடித்துறையாக இந்த புலிபாய்ந்தகல் பகுதியே காணப்படுகின்றது.
இந்நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய அத்துமீறல், அடாவடித்தனமான முயற்சிகளை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. ஓரளவிற்குத்தான் நாமும் பொறுமையாக இருக்கமுடியும் என்றார்.
இதன்போது கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் ந.மதியழகன், தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச உபசெயலாளர் கி.சிவகுரு ஆகியோரும் குறித்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.