புளோரிடாவை தாக்கிய மில்லிடன் சூறாவளியால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,300 க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். இதனால், இறப்பு எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
புயல் தாக்கத்தால் புதன் மற்றும் வியாழன் அன்று பல மணிநேரம் மின்சாரம் இல்லாமல் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் இருளில் மூழ்கியிருந்தன. மில்டன் சூறாவளி ஆரம்பத்தில் 5 ஆம் வகை புயல் என்று கணிக்கப்பட்டதால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும், அது வலுவிழந்து மேற்கு புளோரிடாவை ஒரு 3 ஆம் வகை புயலாக தாக்கியது. மாநிலம் முழுவதும் மின்சாரத்தை மீட்டெடுக்க கனடாவில் இருந்து புளோரிடா வரை நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மின் இணைப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். வெள்ளத்தில் முதலைகள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.