ஆப்கானிஸ்தானில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மூடப்படும் என்று அந்நாட்டு தலிபான்கள் அரசு அறிவித்திருக்கிறது. ஹிஜாப் உடையை சரியாக அணியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு ஆப்கன் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் என்ஜிஓ நிறுவனங்களில் சமீப காலமாக பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இனி பெண் பணியாளர்கள் இருக்க கூடாது. மீறினால் அந்த நிறுவனங்கள் தங்களது உரிமத்தை இழக்க நேரிடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. Also Read “மீண்டும் மீண்டும் அத்துமீறும் தாலிபான்..
வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல்கள் அமைக்க தடை” ஏற்கெனவே தாலிபான்களின் கட்டுப்பாடுகள் ஆப்கானில் எல்லை மீறி சென்றிருக்கின்றன. குறிப்பாக கல்வி விஷயத்தில் இன்று வரை பெண்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றனர். 6ம் வகுப்பு மேல் பெண்கள் படிக்க கூடாது என்று தலிபான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு தற்காலிகமானதுதான் என்று அரசு கூறினாலும் கூட, மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறக்க எந்த முயற்சியும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. அந்நாட்டில் வாழும் பெண்கள் தங்களின் சாதாரண அன்றாட வாழ்க்கைக்காக கடுமையாக ஏங்கி வருகின்றனர். அவர்களின் விடுதலைக்காக போராடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை ஆப்கன் அரசு மறுத்திருக்கிறது. கல்வி கற்க தடை, பொது வெளியில் கூட தடை, உடைகளில் கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் பெண்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது வேலைக்கும் செல்லக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால், வேலையில் இருந்த சொற்பமான அளவிலான பெண்களும் தங்கள் வேலையை இழந்திருக்கின்றனர். அரசின் இந்த உத்தரவுக்கு காரணமாக, ஹிஜாப் குறிப்பிடப்படுகிறது. ஹிஜாப்-ஐ முறையாக அணிவதில்லை என்று கூறிதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.