பெண் விடுதலை என்றால் என்ன? 08.03.1992 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அளித்த விளக்கம்

You are currently viewing பெண் விடுதலை என்றால் என்ன? 08.03.1992 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அளித்த விளக்கம்

இன்று அனைத்துலகப் பெண்கள் நாள்.உலகப் பெண் இனத்தின் உரிமைக்குரல்  உலகெங்கும் முழங்கும் ஓர் எழுச்சி நாள்.மனித இனத்தின் சரிபாதி சனத்தொகையினர் சமநீதி கேட்டு நிற்கும் ஓர் புரட்சிகர நாள் .இந்தப் பெண் எழுச்சி தினம் இன்று தமிழீழம் எங்கும் கொண்டாடுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக  எல்லா நாடுகளிலும் எல்லா சமூகங்களிலும் எல்லாப்பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக  அநீதி .இந்த சமூக அநீதி இன்னும் இந்தப் பூமியில் இருந்து அகன்றுவிடவில்லை..

நீண்டகாலமாக வளர்ச்சிகண்ட  நாடுகளில்  தொடர்ச்சியாக நடந்து வந்த உரிமைப்போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் சுட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடிந்தது.கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினை தீர்ந்த பாடில்லை .இங்கும் பழைய பிரச்சினைகள் புதிய வடிவங்களில் தோற்றம் கண்டு வருகின்றன..

அன்றொரு காலம் மேற்குலகின் முதலாளித்துவம் எழுச்சி கொண்டு வளர்ச்சி கண்ட சகாப்தத்தில் பெண்ணினம் மிகவும்   ஈவிரக்கமற்ற சுரண்டல் முறைக்கு ஆளாகியது.அப்பொழுது பெண் அடக்கு முறையின்  மூலகாரணி முதலாளித்துவம் என்று கூறப்பட்டது..தனியார் சொத்துடமை நீக்கப்பட்டால்  சமத்துவம் அற்ற பொருளாதார அமைப்பு ஒழிக்கப்பட்டால்  பொருள் உற்பத்தியில் பெண்கள் ஈடுபட்டால் பெண்ணினத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என வாதங்களும் முன்வைக்கப்பட்டன.. இதனால் விடுதலை வேண்டி நின்ற பெண்ணினம் சமூகப்புரட்சி போராட்டங்களில் அணிசேர்ந்து கொண்டது.. பெண்ணின் பங்களிப்புடன் பல நாடுகளில் சமூகப் புரட்சிகள் நிகழ்ந்தன. சமுதாய மாற்றம் மூலம் பொருளாதார சமத்துவத்தை கட்டியெழுப்பிய  நாடுகளில் பெண்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. சமூக அந்தஸ்து மேம்பட்டது .ஆயினும் இந் நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றாக நீங்கியபாடில்லை .சமதர்ம சமூக உலகத்திலும் பெண்ணுக்கு சமநீதி கிடைத்ததாக கூறிவிட முடியாது..

இந்தச் சமூகப்பரிசோதனை  மாற்றங்களில்  நாம்  ஒரு உண்மையைக் கண்டு கொள்ளலாம்.அதாவது  பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும்  ஆண்களின் மனோவுலகில்  பெண்மை பற்றிய கருத்துலகில்  ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண்சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.

பெண்ணினத்தின் விடுதலை நோக்கிய பாதையில்  அவர்களது சமூக பொருளாதார வாழ்வு மேம்படுவது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.ஆயினும் அதேவேளை  ஆண்பெண் உறவிலும் அந்த மானசீக உறவிலும் மாற்றங்கள் தேவை .உண்மையான சமத்துவம் என்பது  ஆண்பெண் உறவில் எழும் ஆழமான புரிந்துணர்வில் தான் சாத்தியமாகிறது.

எமது சமூகக்  கட்டமைப்பில் பெண்ணினம் மிக மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது.மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார வாழ்வு  ஒரு புறமும் அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும் ஆணாதிக்க கொடுமைகள் இன்னொரு புறமுமாக பல பரிமாணங்களில் எமது பெண்கள்  ஒடுக்குமுறை

பெண் விடுதலை என்றால் என்ன? 08.03.1992 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அளித்த விளக்கம் 1

இங்கு பெண்விடுதலை என்பது ஒரே காலத்தில் பல்வேறு முனைகளில் தொடுக்கப்பட வேண்டிய ஒரு போராட்டமாக அமைந்துவிட்டது.எமது தேசிய சுதந்திர இயக்கம் பெண்விடுதலையை தனது அடிப்படை அரசியல் இலட்சியங்களில் ஒன்றாக விரித்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றது.

பெண்விடுதலை என்னும் போது அரச ஒடுக்குமுறையில் இருந்தும்  சமூக ஒடுக்குமுறையில் இருந்தும் பொருளாதார சுரண்டல் முறையில் இருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம்.எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள  பெண்விடுதலை போராட்டமானது தேசவிடுதலை  சமூக விடுதலை பொருளாதார விடுதலை என்ற குறிக்கோள்களைக் கொண்ட  மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த மும்முனை போராட்டங்களில் தேசியவிடுதலை  அதாவது எமது மண்ணின் விடுதலை முக்கியமானது .எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது  இன்றைய வரலாற்றின் தேவை  இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை  நாம் அசட்டை செய்ய முடியாது  எமது மண்ணின் விடுதலை பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது..

இந்த மண்மீட்புப் போர்க்களத்தில்  இன்று தமிழ் இளம் பெண்கள் ஆயுதமேந்தி நிற்கிறார்கள்.முழு உலகமுமே வியக்கும் வகையில் அபாரமான அர்ப்பணிப்புகளைச் செய்து வருகிறார்கள்.விடுதலைப் புலிகளின் மகளிர் படைப்பிரிவின் தோற்றமும்  வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில்  ஒன்று என்பதை நான் பேருபெருமிதத்துடன் கூறமுடியும் .தமிழீழப் பெண்ணினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் குறித்து நிற்கிறது

ஒருவிடுதலை இயக்கத்துடன் அணிசேருவதன் மூலமே   பெண்ணினம் தனது விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் வெற்றிப்பெற முடியும் .

வீரமும் தியாகமும் ,துணிவும் ,தன்னம்பிக்கையும் கொண்ட புரட்சிப் பெண்களாக் மாறமுடியும் .பெண்விடுதலைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கும் எமது புரட்சி இயக்கத்துடன் பெண்ணினம் அணிசேரும் பொழுது தான் எமது போராட்டம் முழுமை பெரும்.

எமது சமுதாய அமைப்பில் நிலவிவரும் ஒடுக்குமுறை அழுத்தங்களில் இருந்தும் பெண்ணினம் விடுதலை வேண்டி நிற்கிறது .நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றிய வளர்ந்த மூட நம்பிக்கைகளும் ,இந்த மூட நம்பிக்கைகளில் எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறது .ஆணாதிக்க அடக்கு முறையாலும் ,வன்முறையாலும் சாதியம் சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்கமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது .

இந்த ஒடுக்குமுறைச் சிறையிலிருந்து விடுதலை பெறுவதானால் பெண்ணினம் முதலில் தனக்கு எதிராக ஏவப்படும்  ஒடுக்குமுறையின் தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் .தலைவிதி என்றும் ,கர்மவினை என்றும் ,தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழமை என்றும் ,பண்பாட்டுக்கோலம் என்றும் காலம் காலமாக மனவுலக இருளுக்குள் முடங்கிக்  கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும் .

பெண் விடுதலை என்றால் என்ன? 08.03.1992 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அளித்த விளக்கம் 2

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி

விழிப்படைந்து எழுச்சி கொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற  முடியும் .அந்தப் போராட்ட சக்தியால்தான் ஒடுக்குமுறை விலங்குகளை உடைத்தெறிய முடியும் .

ஆணாதிக்க ஒடுக்க முறைக்கு எதிரான போராட்டம் ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல.இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப்போரட்டாமாகும் .இந்த சித்தாந்தப் போராட்டம் ஆண்களின் மன உலக மாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும் .

மனித உறவுகளில் அடிப்படையாது ஆண்- பெண் உறவு  .இந்த உறவு சாதாரண  சாதாரண சமூக உறவு அல்ல .இது மனித உயிர் இயக்கத்திற்கும் மனித இன விருத்திக்கும் மூலமானது .மனித இனத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஆதாரமானது .

ஆண்- பெண்  உறவில் எழும் அபசுரங்களாகவே  இன்று பெண் இனம் எதிர்கொள்ளும் பல அவலங்கள் தோற்றம் கொள்கின்றன

ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் ,சமத்துவத்தையும் கெளரவத்தையும்மதித்து ,குடும்ப வாழ்வின் பொறுப்புக்களையுப் பகிர்ந்து ,சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து ,பரஸ்பர  புரிந்துணர்வுடன் முரண்பாடுகள் நீங்கும் .இந்த அன்புறவின் அடிமன அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும்ஆணினம் புரிந்து கொள்ளும் போதுதான்  ஆணாதிக்கமும் அதனால் எழும் அதிகார அடக்குமுறைகளும் அகன்றுவிட வாய்ப்புண்டு .

புலிகளின் தாகம்தமிழீழத் தாயகம் 

வே.பிரபாகரன் 

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply