கற்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அக்கரைப்பற்று- புத்தளம் பேருந்தில் சுமார் 3 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றையதினம் (01.06.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேருந்தில் உரைப்பை ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து குறித்த ஐஸ் போதை வியாபாரத்தில் தொடர்புடைய மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்த பிரதான சந்தேக தலைமன்னாரில் இருப்பதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கற்பிட்டி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியினால் சாலியவெவ சிறீலங்கா காவற்துறையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கற்பிட்டி ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 5 பேரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அலவ்வ பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெருமதி சுமார் 3 கோடிக்கும் அதிகம் எனவும் இவை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.