“ஊடகவியலாளன் என்பவன் பேராபத்துகளிலும் கொந்தளிக்கும் பேரலைகள் நடுவிலும் அஞ்சாத நெஞ்சோடு நிலை தளராது இலக்குத் தவறாமல் பாதை வழி தவறாமல் காற்றின் திசைக்கேற்ப கப்பலைச் செலுத்தி தன் மக்களைக் காத்து சரியாக வழிநடத்தும் சிறந்த மாலுமியாக இருக்க வேண்டும்!”
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி என்னிடம் அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் என்னை பெரும் புயல் காலத்திலும் மிக நிதானமாக தெளிவாக மக்களிற்கு உண்மையாக ஊடகப்பணி ஆற்றும் துடிப்போடு இயங்கிட வழி நடத்திச் செல்வதை உணர்கின்றேன்!
அவருக்கு வீரவணக்கம்!
—————————————————-
இன்று அவரின் நினைவு நாள்!
காலம் போற்றும் ஊடகவியலாளனை இழந்த வலி ஈழத்துத் தமிழர்க்கு!
தந்தையின் பிரிவால் பரிதவிக்கும் அவர் மகள் சிந்துவின் ஏக்கம் எத்துணை கொடும் வலி!
தந்தையை இளம் வயதில் பிரிந்து இனத்தின் வலி சுமக்கும் ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் சின்ன மகள் சிந்து சிறுமியாக சில ஆண்டுகளின் முன் எழுதிய ஏக்க மடல்….
——————————
“ஆண்டுகள் பல முடிந்திட்டாலும் எனது அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு.
ஏனெனில் இரண்டரை வயதில் எனது அப்பா எனக்கு செய்தவை, செய்ய நினைத்தவை, செய்யவைத்து கைதட்டி மகிழ்ந்தவை எல்லாமே இன்று எனக்கு கொஞ்சமே ஞபகமாய்………….
இப்ப பார்த்து மகிழும் வயது எனக்கு.
ஆனால் எதையும் பெறமுடியாதவளாய் உங்களை நிறைய மிஸ் பண்ணிவிட்டன் அப்பா….
மற்றப் பிள்ளைகள் தங்கள் அப்பாவுடன் அன்பைப் பகிரும்போதும் அவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுக்கும் போதும் எனது மனம் எவ்வளவு வலிக்குதப்பா….!
அப்பா!
‘என்னைத் தமிழீழத்தின் இராஜதந்திரி ஆக்கி வெளிநாடுகளுக்கு நான் போகும்போது நீங்கள் என்னுடைய பையைத் தூக்கிக் கொண்டு என்னோடு வரவேண்டும்!’ என்று பல கனவுகள் கண்டீர்களாமே?
கடைகளுக்குக் கூட்டிப்போனால் உங்களுக்குப் பிடிக்காட்டிலும் எனக்கு பிடிக்கும் என்பதற்காக எல்லாம் வாங்கி தருவீர்களாமே?
அது எப்படி அப்பா எனக்காக உங்களையே மாற்றிக் கொண்டீர்கள்?
ஒரு நாள் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்தபோது விசுவமடுவில ஒரு கடைக்கு அம்மாவுடன் போனேனாம்…
அப்போது ஒரு சப்பாத்து இருந்ததாம் அம்மாவிடம் வாங்கித் தரச்சொல்லி கேட்டேனாம்… அதற்கு அம்மா வாங்கித் தரவில்லையாம்.
ஆனாலும் நான் அடம்பிடிக்காது நல்ல பிள்ளைபோல் வந்து நீங்கள் வேலை முடிந்து வந்ததும்
“அப்பா நான் ஒரு சப்பாத்து கண்டு வாங்கி தரச்சொல்லி அம்மாவிடம் கேட்டேன் அவ வாங்கித் தரவில்லை!” என்று சொன்னேனாம்! அப்போது நான் உங்கள் முழங்காலிற்கு கிட்ட இருந்தேனாம்.
தன்னிடம் தனது மகள் முதல் முதலாக நிமிர்ந்து நின்று கேட்டு விட்டாள் என்று உடனேயே கூட்டிப் போய் வாங்கி தந்தீர்களாமே?
நீங்கள் மேடைகளில் பேசும் போது நான் கீழே இருந்து உங்களைப் பார்த்துவிட்டு தவழும் வயதில் தவண்டும், மெல்ல மெல்ல நடக்கும் வயதில் தட்டு தடுமாறி படிகளில் ஏறி வந்தும் உங்களுக்குப் பக்கத்தில் இருப்பேனாம்..பேசுபவற்றைக் கேட்டுக் கொண்டு குழப்படி செய்யாமல்.
இப்போது நானும் மேடைகளில் ஏறுகிறேன் எந்தவிதத்திலும் பயமோ தடுமாற்றமோ இல்லாமல்…
பலபேர் கைதட்டி பாராட்டுகிறார்கள்… ஆனாலும் நீங்கள் பக்கத்தில் இருப்பதுபோல் வருமா?
இன்றும் ஜெனிவாவில் உங்கள் உயிரற்ற உடலை நான் கொஞ்சி வழியனுப்பிய படம் இத்தனை வருடங்களாக நீதி வேண்டி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் நீதி கிடைக்கவில்லை!
உங்களைப் போல் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை! எப்போது தான் நீதி கிடைக்குமோ…….?
உங்களின் மகளாக உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவேன் அப்பா… !!!!
அதுவரை நாம் இருவரும் உள்ளுணர்வோடு பேசிக் கொள்வோம்…..!
இப்படிக்கு
உங்கள் அம்முக்குட்டி
சிந்து சத்தியமூர்த்தி