பெர்லினில் 15 நோயாளிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெர்லினில் நோயாளிகளின் இறுதி நேர கவனிப்பு மருத்துவர் ஒருவர் 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரை பன்னிரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் பதினைந்து பேரின் மரணத்திற்கு இந்த 40 வயது மருத்துவர் வேண்டுமென்றே காரணமானதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை செய்வதற்கான “வெறி”யே இந்த செயல்களுக்கு காரணம் என்று அவர்கள் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சந்தேக நபரின் பெயரை வெளியிடாத நிலையில், ஜேர்மன் ஊடகங்கள் அவரை ஜோஹன்னஸ் எம்.(Johannes M.) என்று அடையாளம் காட்டியுள்ளன.
பெர்லின் அரசு வழக்கறிஞர் அலுவலகம், மருத்துவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கொடூரமான முறையை விவரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர் மயக்க மருந்து மற்றும் தசை தளர்த்தி மருந்தை ஒரு சக்திவாய்ந்த கலவையாகத் தயாரித்து, அதை நோயாளிகளின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் செலுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செலுத்தப்பட்ட தசை தளர்த்தி சுவாச தசைகளை முடக்கியதாகவும், இதன் விளைவாக சில நிமிடங்களிலேயே சுவாசக் கோளாறு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது மருத்துவரின் கவனிப்பில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் வயது 25 முதல் 94 வரை இருந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் மருத்துவ சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்ட நடவடிக்கைகள் முன்னேறும்போது மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.