“பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை”: இஸ்ரேல் திட்டவட்டம்!

You are currently viewing “பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை”: இஸ்ரேல் திட்டவட்டம்!

போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியதை தொடர்ந்து கத்தார் நாட்டின் சமரச முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் அக்டோபர் 7ம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கத்தாரின் சமரச பேச்சுவார்த்தையின் கீழ் 6 நாள் போர் நிறுத்தம் காசாவில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் அதிகாரிகள் கத்தாருக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போர் நிறுத்தத்தால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அதே சமயம் இஸ்ரேலிய சிறையில் வாடும் பாலஸ்தீனியர்களும் நூற்றுக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க முதலில் ஹமாஸ் படையினர் ஒப்புக் கொண்டனர், ஆனால் பின்னர் அதிலிருந்து ஹமாஸ் படையினர் பின்வாங்கி விட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இதனால் நீட்டிக்கப்பட இருந்த போர் நிறுத்தத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பின்வாங்கியது. அத்துடன் கத்தாரில் இருந்து தங்களது மொஸாட் அதிகாரிகளையும் திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் இரு படைகளுக்கும் இடையிலான சண்டை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் ஜிஹாத் அமைப்பினரை குறிவைத்து 400 மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆண்களை விடுவிக்க வேறு விதமான நிபந்தனைகளை முன்வைக்கும் ஹமாஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்காத வரை எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இஸ்ரேல் தயாராக இல்லை என தெரிவித்துள்ளது.

எனவே போர் நிறுத்தம் குறித்து தற்போது கத்தாருடன் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஒருவேளை போர் தொடர்ந்தால் இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply