இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பேச்சுவாரத்தைக்கு போவதற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம். அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய நினைவேந்தல், கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
“ அரசாங்கம், இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தம் மௌனிக்கப்படாமல் ஒரு இயங்கு நிலையில் இருந்திருந்தால் எங்களுடைய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவும் தமிழ்ச்செல்வம் அண்ணனும் அந்த முழுப்பொறுப்பையும் ஏற்று ஒட்டுமொத்த தேசத்துக்காக இந்த நிலைமைகளைக் கையாண்டு இருப்பார்கள்.
சிங்கள பௌத்த தேசிய வாதம் தமிழ் மக்களுடைய நியாயத்தை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாகினால் தமிழ்த் தேசம் சார்பில் ஒரு மிகத்திறமான தீர்வைப்பெற்றுக் கொடுக்கக்கூடிய தரப்பு என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே என்கின்ற ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
ஒரு உட்சபட்ச தீர்வு எட்டுவதாக இருந்தால் இயக்கம் தான் அதை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எங்களுடைய மக்களிடையே இருந்தது. தமிழீழ இயக்கத்தை விமர்சிப்பவர்கள்கூட தமிழ்த் தேசியம் என்கின்ற கோணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தான் தமிழ் மக்களுக்கு ஒரு உயர்ந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்ற யதார்த்தத்தையும் உண்மையையும் அவர்களால் கூட மறுக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட தலைமைத்துவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது இன்றைக்கு இருக்கக்கூடிய நபர்கள் உண்மையிலேயே அரசியல் கோமாளிகள். இனத்துக்கு வெட்கத்தை ஏற்படுத்துகின்ற நபர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
இனத்துக்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித் தலைவர்கள் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறார்கள்.
தமிழ் மக்களுடைய வாக்குகளையே பெற்று ஆட்சிக்கு வந்து அவர்களுடைய நலனினை கருத்திற் கொள்ளாமல் தங்களுடைய சுய இலாபங்களுக்காகவும் வேறு வேறு தேவைகளுக்காகவும் இனத்தை விற்கின்றவர்களாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.
ஒட்டுமொத்தமாக சிங்கள தேசத்தாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஓர் இனவாத கூட்டதுக்கு கடமைப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். அவருடைய பேச்சுவார்த்தையை நம்பி தமிழினம் சென்று ஒரு விட்டுக்கொடுப்பினைச் செய்தால் அது ஒரு நிரந்தர விட்டுக்கொடுப்பு.
அதிலிருந்து நாங்கள் மீளவே முடியதா அளவுக்குத்தான் நிலைமைகள் இருக்கின்றது. ஆகவே இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதால் தமிழினத்துக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.
இவ்வாறான ஒரு நேரத்தில் தமிழினத்துக்கு எந்தவிதமான சாதகமான நிலைப்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதென்பது இனத்தினுடைய நன்மைக்காகவா என்கின்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.
பேச்சுவாரத்தைக்கு போவதற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம். அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை.
முன்றாம்தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் பேசிக்கொண்டு பேச்சுவார்த்தையில் அவர்கள் வாயே திறக்கவில்லை என்பதையே இன்று ஊ்டகங்களுடைய தலைப்புச்செய்திகளும் வெளிப்படுத்தியிருக்கிறது.
பேச்சுவார்த்தை மேசையில் நீங்கள் போய் அமர்ந்து கொள்வதனூடாகவே ரணிலுக்கான அங்கீகாரத்தை கொடுப்பதாக அமையும் என்பதை இவர்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் கூறினோம். அவர் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்.
ஆகக்குறைந்தது அந்த அங்கீகாரத்தை கொடுப்பதாக இருந்தால் இனத்துக்காக கொள்ளை ரீதியிலாகவாவது எங்களுக்கொரு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய சூழலையாவது உருவாக்காமல் அந்த அதிகாரத்தை கொடுப்பதானது எதிர்காலத்தில் எங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.