“பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை தொடங்கும்” – சீமான்!

You are currently viewing “பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை தொடங்கும்” – சீமான்!

மக்கள் எதிர்ப்பை மீறி கருணாநிதி பேனா நினைவு சின்னம் கடலில் அமைக்கப்பட்டாலும், நாம் தமிழர் கட்சி போராட்டத்தை தொடங்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல் சிவாஜி, கண்ணகி சிலையை தூக்கியது போல், அதிகாரம் கைக்கு வரும் போது பேனா சிலையையும் தூக்குவோம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகளின் திருமணம், நாகர்கோவிலில் நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து சீமானிடம் எழுப்பிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாய தோற்றம். மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம்.

மக்களுக்கு நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை .ஆனால் அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள். கடைசி மூன்று நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களிடமே கூறுகிறார்கள். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட கொளை. நான் யாருடனுடம் சேர மாட்டேன். அது எனது கொள்கை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேனா நினைவு சின்னம் பற்றிய கேள்விக்கு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து பேசியது தனது கருத்து இல்லை மக்கள் கருத்து. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.

கருணாநிதி சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என்றேன். அதிகாரம் ஒரே ஒருத்தருக்குப் பட்டயம் போட்டு வைக்கவில்லை. அந்த அதிகாரம் என் கைக்கு வரும்போது நான் உடைப்பேன். அவர்கள் சிவாஜி சிலையைத் தூக்கினார்கள். முன்னதாக கண்ணகி சிலையை தூக்கினார்கள். அதுபோல நாங்களும் பேனா சிலையைத் தூக்குவோம்.

இந்தியாவில் அம்பேத்கர் பேனாவுக்கே சிலை இல்லை. காந்தியும் அம்பேத்கரும் நம் நாட்டின் அடையாளங்கள். மலேசியா, சிங்கப்பூர் போனால் கூட படேல் யார் என்றே தெரியாது. ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்க உதவினார் என்பதற்காக, படேலுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அந்தச் சிலை வைக்கும்போதே நாங்கள் எதிர்த்தோம். நாங்கள் அதிகாரத்துக்கு வரவே முடியாது என நீங்கள் நினைக்கக் கூடாது. இப்போது அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை திமுகவுக்கும் வரும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வடமாநில மக்கள் தமிழ்நாட்டில் குடியேறுவது பற்றிய கேள்விக்கு, மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2 கோடி வடமாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள். இங்கு வந்து எங்கள் வேலையைப் பறிப்பார்கள், தமிழர்களை நிலமற்ற கூலிகளாக்குவார்கள். இதுதான் இலங்கையிலும் நடந்தது. தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் விசா போன்று அனுமதி எடுக்க வேண்டும். அவர் எங்கு தங்குவார், எத்தனை நாள்கள் தங்குவார் என்ற விவரங்களை வாங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply